உடைந்த இரவு
பி..கிருஷ்ணமூர்த்தி
கிழக்கு
வானம் சிவந்து உதய சூரியனை வரவேற்க காத்திருந்தது. தேசீய நெடிஞ்சாலையில் வேகமாக
சென்று கொண்டிருந்த மோட்டார் வாகனங்களின் சத்தம் அந்த விடியலின் நிர்மால்ய அமைதியை
கலைத்தது. சாலையின் இரு பக்கங்களிலும் பரவியிருந்த சில பெட்டிக் கடைகளும் ஒரு மதுபான கடையும்
மூடியிருந்தன.. சாலை ஓரத்தில் விடியலின் லேசான குளிர் காற்றில், முந்திய இரவில் அதிகமாக குடித்ததின்
போதையில் வேலு அயர்ந்து படுத்திருந்தான். விடியற் காலையில் வேலைக்கும் செல்லும் ஜன நடமாட்டத்தில் சிலர் அவனை
பார்த்தும் பார்க்காதது போல் கடந்து சென்றனர். ஒரு சிலர் மனிதாபிமானத்தில் அவனிடம்
நின்று அவனை எழுப்ப முயன்றதில், வேலு கண்களை திறந்தான். இரவு நன்றாக குடித்துவிட்டு தள்ளாடி அங்கு வந்து
விழுந்ததை அவன் நினைத்து பார்த்ததில் அவன் குறுகிப் போனான்.
வேலுவும்
செல்வியும் அன்றாட கூலி வேலை செய்து நெல்லிக் குப்பத்து வாசிகளாக இருக்கும்
தம்பதிகள். வேலு ஒரு லாரி கிடங்கில் மூட்டைகளை தூக்கும் கூலி ஆள். செல்வியோ கட்டிட
வேலையில் சித்தாளாக வேலை செய்பவள். இந்த
வருமானத்தில் அவர்களுக்கு அரை வயிற்று
கஞ்சிதான் தினமும் கிடைத்தது. அவர்கள்
தம்பதிகளாகி பத்து வருடமாகியும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. மருத்துவ
சோதனையில் செல்வி வாழ்நாள் முழுவதும் மலடியாகத்தான் இருப்பாள் என்பது தெரிந்தது.
ஆரம்பத்தில் மூட்டைகளை தூக்கியதில் ஏற்பட்ட களைப்பை மறக்க சிறிது குடிக்க தொடங்கிய வேலு, நாளடைவில் குழந்தை பேறு நிரந்தரமாக இல்லாததால் குடிபோதைக்கு அடிமையானான்.
தன் மலடித்தனாத்தால் இந்த நிலைக்கு அவன் ஆளானான் என்ற குற்ற உணர்ச்சியில் செல்வி
அவனை ஆரம்பத்தில் மாற்ற முயற்சிக்கவில்லை.
குடிப்பதில் அவன் சந்தோஷம் அடைந்தால் அது அவனுக்கு தான் செய்யும் பிராயசித்தம் என
நினைத்தாள். ஆனால் அது போக போக முழுவதும் அதற்கு அடிமையாகி,
அவனை வெறி பிடித்த மிருகமான நாட்களை அவளால் மறக்க முடியவில்லை. ஆண்டவன் தன்னை
தாய்மையாகாத குறையுடன் படைத்ததை நினைத்து
அழுத இரவுகளும்,
குடித்துவிட்டு போதையில் வெளியே பல இடங்களில் அவன் விழுந்த கிடந்த இரவுகளும் அவள் வாழ்வில் எத்தனையோ!
அது
தீபாவளிக்கு முந்திய இரவு. குப்பத்து குழைந்தைகள் கூட்டமாக, பட்டாசு, புஸ்வாணம்
போன்ற வாண வேடிக்கைகளையுடன் கொண்டாடி கொண்டிருந்தனர். இதை வேடிக்கை பார்த்து
கொண்டிருந்த செல்விக்கு திடீரென்று கூலி வேலை முடிந்து வேலு சீக்கிரமே வீட்டிற்கு
வரும் காட்சி வியப்பாக இருந்தது. மேலும் அவன்
கையில் பைகளுடன் ஆர்வமாக. போதையில் இல்லாமல்
நிதானமாக நடந்து வந்தது. “என்ன செல்வி முழுச்சு பார்க்கிறே? தீபாவளிக்கு லாரி கிடங்கிலே கொஞ்சம் பணம் கொடுத்தாங்க. ரொம்ப நாளா உனக்கு
சேலை வாங்கணும்ன்னு எனக்கு அம்புட்டு ஆசை. இன்னைக்கு வாங்கிட்டு வந்துட்டேன்”
என்று செல்வியின் மெளனத்தை கலைத்தான். மனதின்
எதிரொலியாக மெளன மொழியில் செல்வி ஆண்டவனை
வேண்டி கொண்டாள். கையில் காசு இல்லாத நிலையிலும் திருடியாவது, அல்லது கெஞ்சி பிச்சை எடுத்தாவது தன் குடி வெறியை தணிக்கும் வேலு, இப்போ வசதியாக காசு கையிலே கிடைச்சும், குடியை நாடாமல், வீட்டை நாடி பரிசுகளுடன் வந்தது
கனவாக இருக்க கூடாதே என்று தான். வேலு செல்வியின் தோள்மேல் கை போட்டு குடுசைக்குள் கூட்டி சென்றான். கண்கள் சிவக்க
போதையில்லாமல் இப்படி வேலு நிதானத்துடன் தன்னுடன் இருக்கும் அந்த சில நிமிடங்களை
நிரந்தரமாக்க, கால சக்கரத்தை நிறுத்த முடியாதா என்று வேண்டினாள்.
அப்பொழுதும் தாயாகத அவளின் குற்ற உடல்
குறுகி கண்களில் கண்ணீராக நின்றது.
“ஏய்!
புள்ளே! இந்த சேலை உனக்கு புடிச்சிருக்கா? வரும் வழியிலே ஒரு துணிக் கடையிலே அழகா ஒரு பொம்மைக்கு
கட்டி நிறுத்தி இருந்தாங்க. அந்த பொம்மையிலே உன்னை பார்த்தேன். அதே மாதிரி புடவையை
அங்கேயே வாங்கிட்டேன். நமக்கு கண்ணாலம் ஆகி எத்தன வருஷம் ஆச்சு. இது தான் முதல்
தபா உனக்கு சேலை வாங்கியாந்துருக்கேன்.
எப்படி இருக்குன்னு சொல்லு புள்ளே?” இந்த வார்தைகளில் சில நிமிஷம் செல்வி உலக்த்தையே மறந்தாள். வேலு
செல்வியின் பதிலுக்கு காத்திருந்தான். “எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. அந்த
சுவோப்பு கலர்தான் என்க்கு பிடிக்கும்ன்னு உனக்கு எப்படி தெரியும்?” என்றாள். பதிலுக்கு என்ன சொல்வது என்று தெரியாது முழித்தான். பேச்சை மாற்றி
“ஆமா. உங்க முதலாளி பண்டிகைக்கு பணம் எதுவும் தனியா கொடுக்கல்லையா?” என்றான் வேலு. “கொடுத்தாங்க. ஆனா
நீ எங்கே குடிச்சுட்டு வழக்கம் போல வர்ரயோன்னு நினைச்சி நான் வாங்கிட்டு வந்ததை
காமிக்கலை இப்போ எடுத்துட்டு வாரேன்.” என்று குடிசையின் ஒரு மூலையிலிருந்து
எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள் செல்வி.
ஒரு வேஷ்டியும் சட்டையும் அதில் இருந்ததை பார்த்து “நீயும் ஞாபகமா எனக்கும் புது
துணி வாங்கியிருக்கே” என்றான்.
வெளியிலிருந்து கேட்ட அலறல் அவர்களின் உரையாடலுக்கு தடை போட்டது. உடனே இருவரும்
வெளியே வந்தனர். அவர்கள் பார்த்த காட்சியில் இருவரும் கதி கலங்கி போயினர். எதிரே
ஒரு குடிசையில் தீ பிடித்து நன்றாக எரிந்து கொண்டிருந்தது. குப்பத்து ஜனங்கள்
கூட்டமாக எரியும் தீயை அணைக்க முயன்று கொண்டிருந்தனர். குடிசையின் சொந்தக்காரி
செண்பகம் “அய்யோ என் குழந்தை உள்ளே மாட்டிகிடுச்சே. யாராவது காப்பாதுங்களேன்”
என்று அலறி கொண்டிருந்தாள். தீயின் ஜ்வாலையை பார்த்து ஒருவரும் கூட்டத்தில் உள்ளே
இருக்கும் குழந்தையை காப்பாற்ற முன் வரவில்லை. இதை பார்த்து கொண்டிருந்த வேலு, வேகமாக எரியும் குடிசைக்குள் சென்று சில நிமிட போராட்டத்திற்கு பிறகு அந்த
மூன்று வயது குழந்தையுடன் வெளியே வந்தான். அவன் முகமும் குழந்தையின் முகமும்
தீயின் அனலில் கருத்து போயிருந்தன. குப்பத்து கூட்டமே வேலுவை இதற்கு பாராட்டு
சொல்ல, செண்பகம் வேலுவின்
கால்களில் விழுந்து இதற்கு நன்றி சொன்னாள். செல்வி மாத்திரம் பதறிபோய் வேலுவை கட்டிப்பிடித்து
குடிசைக்குள் கூட்டிச் சென்று அவன் காயங்களுக்கு மருந்து போட்டாள். “உனக்கு எதாவது
ஆயிருந்தா?’ என்று தன் ஆதங்கத்தை வெளிபடுத்தினாள். “செல்வி!
ஒரு சின்ன குழந்தை தீயில் மாட்டிகிட்டு திணறும் போது நம்ம உசிரா பெருசு. என்ன
பாவம் பண்ணினோமோ நமக்குதான் குழந்தை பாக்கியம் கொடுத்து வைக்கல்லை. செண்பகத்து குழந்தையையாவது காப்பாத்தி அந்த
பாவத்துக்கு கொஞ்சமாவது பிராயசித்தம் தேடலாம்” வேலுவின் இப்படிபட்ட அடி
மனதிலிருந்து வெளி வந்த விரக்தியின்
பிரதிபலிப்பு செல்வியின் குற்ற உணர்ச்சியை மேலும் தூண்டியது.
மனித குலத்தின் மனநிலையில் பல்வேறு முகங்கள் உண்டு. சமய சந்தர்பங்களின்
நிர்பந்தங்களுக்கு வளைந்து கொடுத்து தங்கள் உண்மை முகங்களுக்கு திரை போடுபவர்கள்
பலர். எந்த சூழ்நிலையிலும் மாறாது ஒரே மனநிலையை கொண்ட மகான்களின் எண்ணிக்கையை
விரல் விட்டு எண்ணி விடலாம். விதி வசத்தால் ஏற்படும் ஒரு தனி நபரின் வாழ்க்கையின்
ஏமாற்றத்தை அவர் மனம் புண்பட, கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் குத்தி
காட்டுவது பலரின் மனநிலையாக அன்றாடம் காண்கிறோம். அப்படி தாக்கபட்ட அந்த நபரின் மனநிலை, அந்த ஏமாற்றத்தை மறக்க, பல போதை பொருள்களை நாடுவதம், அதனால் தன்னை
சீண்டியவனை வன்முறையில் தாக்குவதும், அன்றாட
காட்சிகளாக இருக்கின்றன. அன்பும் பாசமும் அந்த மனதின் அடித்தளத்தில் ஆழமாக இருந்தாலும், மற்றவர்கள் தன் ஏமாற்றத்தை சுட்டி காட்டு விமர்சிக்கும் பொழுது, அன்பும் பாசமும் மறைந்து வன்முறை மனநிலை கொடூர உருவம் எடுக்கிறது.
வேலுவும்
இப்படிபட்ட மனநிலைகளின் கதாநாயகன். செல்வியின் குறையினால் தன் வாழ்க்கையில் ஒரு
வாரிசு இல்லாமல் போய்விட்டதே என்று ஏக்கப்பட்டாலும், குடிக்கும் இடங்களில் போதையில் ஏற்படும் வாக்கு வாதாங்களில் அவன் ஆண்மையை
மற்றவர்கள் குத்தி காட்டும் பொழுதெல்லாம், வேலு வன்முறையை
நாடினான். இது அவனின் ஒரு மனநிலை. அவனுக்கு வாரிசு இல்லாதது அவனால் அல்ல என்று
தெரிந்தும், செல்வியிடம் அவன் அன்புடனும் பாசத்துடனும்
இருந்தான். மற்றவர்கள் செல்வியை தள்ளி வைத்து விட்டு வேறு திருமணம் செய்து
கொள்ளும்படி கூறும் பொழுதெல்லாம் அதற்கு மறுத்து விடுவான். செல்வியிடம் குறை
இல்லாமல், அவனிடமிருந்தால் செல்வியை மறுமணம் செய்து கொள்ள இந்த சமுதாயம் அனுமதிக்குமா
என்று வாதாடுவான். இந்த மனநிலையில் அவன் செல்வியை என்றுமே வெறுத்ததில்லை. ஆனால் ஏமாற்றத்தை மறக்கவும் வேலையின் களைப்பிலும்
அவன் குடிக்கு அடிமையானான். இது
நாளைடைவில் அன்றாட பழக்காமகி, அதற்கான வசதியில்லாத போதும்
கூட மற்றவரிடம் கையேந்தும் அளவிற்கு கொண்டு சென்றது. வீட்டிலும் தன் அன்பான மனைவி
சேர்த்து வைத்திருக்கும் நகைகளையும் சிறு சேமிப்பையும் அவளை கட்டாயபடுத்தி வாங்கி
குடிக்கே செலவு செய்தான். அது அவன் மனநிலையின் மற்றொரு முகம். வாரிசை கொடுக்க
இயலாமைக்கு பிராயசித்தம் தேடி, செல்வியும் அவனுடைய அவன்
மனநிலையை பொருமையுடன் ஏற்றுக் கொண்டாள். அப்பொழுதும் இருவரும் ஒருவரை ஒருவரை
விட்டு வாழ விரும்பவில்லை. காரணம் அடித்தளத்தில் ஆழமாக அவர்களிடம் பதிந்திருக்கும் பரஸ்பர பாசத்தின் விளைவு.தான்
அது
அன்று
ஊரில் விலைவாசி உயர்வால் வேலை நிறுத்தம் காரணமாக லாரிகள் எதுவும் ஒடாததால்
வேலுவிற்கு கூலிப்பணம் கிடைக்கவில்லை. குடிப்பழக்கம் மாலை நேரம் தவறாமல் அவனை
ஆட்கொள்ள, வேலைக்கு சென்று வீடு திரும்பிய செல்வியிடம் கேட்க மனமில்லாமல், கடனாகவோ அல்லது பிச்சையாகவோ பணத்திற்கு
அலைந்தான். குடி பழக்கம் அவன் நிலையை புரிந்து கொண்டு அவனை விட்டு விடவா போகிறது? நேரமாக ஆக, அந்த கொடிய பழக்கம் அவனை அதன் வெறியன்
ஆக்கி, முடிவில் செல்வியிடமே அவனை தஞ்சம் அடைய வைத்தது.
குடிசைக்கு
வந்த வேலு, செல்வி வீட்டிற்குள் எதோ வேலையாக இருக்க, அவள் வழக்கமாக பணம் வைத்திருக்கும் இடத்தை தேடினான். அங்கு எதுவும்
இல்லாததால், குடியின் வெறி அவனிடம் விஸ்வரூம் எடுக்க செல்வியிடம்
அதிகாரமாக பணம் கேட்டான். ஆனால் அன்று செல்விக்கும் கூலி கிடைக்காததையும் வீட்டில்
வேறு பணம் இல்லாததையும், வேலுவிடம் சொல்லும் போது, அவள் மிகவும் வருந்தினாள். அவன் குடிவெறியை தணிக்க அவளால் உதவ
முடியவில்லையே என்று மனதில் நொந்து
போனாள். வேலுவின் கண்கள் குடிசை முழுவதையும் நோட்டம் விட்டு,
முடிவில் செல்வியிடம் நின்றது. அவள் கைகள் இரண்டும் எந்த நகையும் இல்லாமல் மூழியாக
இருந்தது. கழுத்திலே தங்க தாலியை தவிர எதுவுமே இல்லை. வேலுவின் கண்களுக்கு தன்
குடி வெறியை தணிக்க பணத்தை கொடுக்கும் அது வெறும் தங்க நகையாக தெரிந்ததே தவிர, அது அவனுக்கு வாழ்க்கை துணையை தேடி கொடுத்த,
பண்பின் புனித அடையாளமாக தெரியவில்லை. அவன் பார்வை தன் கழுத்தில் இருந்த தாலி
சரடில் மையமிட்டிருப்பதையும, அவன் அதற்காக அருகில் ஆவேசமாக வருவதையும் புரிந்து
கொண்ட செல்வி, எதற்கும் தன்னை தயார் செய்து கொண்டாள்.
பக்கத்தில் வந்த வேலு, “எனக்கு பணம் கொடுக்கிறாயா இல்லையா”
என்று பயமுறுத்தினான். “எங்கிட்டே பணம் எதுவும் இல்லே” என்ற செல்வி. அவன் அடுத்து
என்ன செய்வானோ என்று அச்சத்தோடு காத்திருந்தாள். “உன்னுடைய நகை எதாவது கொடு” என்ற அவன் கேள்விக்கு,
“எல்லாத்தையும் தான் நீ வித்துட்டியே..
இன்னும் என்ன பாக்கி இருக்கு” என்றாள் செல்வி. ஒரு நிமிட மெளனம் இருவரிடையே
நிலவியது. செல்வியின் மிக அருகில் வந்த வேலு, அவளை பார்த்து
கொண்டே “வேறே நகை இல்லே” என்று தன் முரட்டு கைகளினால் அவள் கழுத்தில் இருந்த
தாலியை பிடித்து இழுக்க முயற்சி செய்தான். “அடப்பாவி மனுஷா! அது நீ கட்டின தாலிடா”
என்று தன் இரு கைகளினாலும் தாலியை கெட்டியாக பிடித்து கொண்டு வேலுவை தள்ளினாள். இந்த
போராட்டத்தில் அவள் உறுதியாக இருந்தாள். செல்வியின் தள்ளலினால் ஆத்திரபட்டு அவளை
வேகமாக பதிலுக்கு கீழே தள்ளி குடிசையை விட்டு வெளியேறினான்.. “டாஸ்மார்கு” கடைக்கு
வந்து அவனுக்கு தெரிந்தவனிடம் குடியை வாங்கி குடித்து விட்டு நெடுஞ்சாலையில்
விழுந்து கிடந்தான்.
மறுநாள்
விடியலில் தள்ளாடி கொண்டே எழுந்திருந்த வேலு, செல்வியின் நினைவு வர, தன் குடிசையை பார்த்து
நடந்தான். அங்கே குப்பத்து ஜனங்கள் தன் குடிசையின் முன்னே கூட்டமாக இருக்க, அழும் குரல்கள் உள்ளேயிருந்து வர, குழம்பிப் போய்
உள்ளே நுழைந்தான். தாய்குலத்தின் கூட்டம் “போயிட்டையா செல்வி” என்று ஒப்பாரி
வைத்து கொம்ண்டிருந்தது. வேலுவை பார்த்ததும் “அட பாவி! செல்வியை கொன்னுட்டையே! அவ உன்மேலே உசிரையே
வச்சிருந்தா. இந்த பாவம் ஏழு ஏழு ஜன்மத்துக்கும் உன்னை சும்மா விடாது. . நீ
நல்லாவே இருக்கமாட்டே.” என்று சாபம் இட்டனர். இதையெல்லாம் கேட்டுக் கொண்டே வேலு
செல்வியின் உடலருகே சென்று பார்த்தான். தலையில் நன்றாக அடிபட்டு, வெளியேறிய இரத்தம், தரையில் உறைந்து கிடந்தது. அவளின்
வலது கை பிடி அவள் கழுத்தில் தொங்கிய தங்க
தாலி கெட்டியாக பிடித்து கொண்டிருந்தது. வேலுவிற்கு சில நொடிகளில் நடந்தவை எல்லாம்
புரிந்து விட்டது. முந்திய இரவு நடந்த போராட்டத்தில் அவள் உறுதியாக தாலியை
அவனுக்கு கொடுக்க மறுத்து அதனால், வெறியில் அவளை கீழே
தள்ளியது நினைவுக்கு வந்தது. அவன் தள்ளியதில் பின்னாலிருந்த அம்மி கல் மேல் அவள் விழுந்து, தலையில் பலமாக அடிபட, மயங்கி விழுந்திருக்கிறாள்.
பிறகு அவளுக்கு என்ன ஆயிற்று என்று கூட பார்க்காமல் வெளியே சென்று விட்டான்.
செல்வியின் மரணம் முந்திய இரவு வேலு
தள்ளிவிட்டதால் நடந்ததாகவும், குப்பத்திலிருந்த
செல்வியின் நெருங்கிய ஒரு தாய்குலம் காவல்துறைக்கு தொலைபேசியில் பூகார்
கொடுத்தாள். சிறிது நேரத்தில் வந்த காவல் துறையின் விசாரணையில், வேலுதான் செல்வியின் மரணத்திற்கு
காரணம் என்ற முடிவில் அவனை காவல் நிலையத்திற்கு கூட்டி சென்றனர்.
சில
மாதங்களுக்கு பிறகு அந்த கொலை வழக்கில், வேலு முரட்டு தானமாக செல்வியிடம் தங்க தாலியை பறிக்கும் போராட்டத்தில், செல்வியை கீழே தள்ள, அவள் அருகிலிருந்த அம்மிக்
கல்லின் மேல் விழுந்து தலையில் அடிபட்டு
உயிரிழந்தாள் என்றும்,
செல்வியின் மரணத்திற்கு வேலுதான் காரணம் என்று நீதிமன்றத்தில் காவல்துறை வாதாடியது.
ஆனால் பிரேத பரிசோதனையின் அறிக்கையில், போராட்டத்தால் செல்விக்கு நெஞ்சுவலி வந்து, மயக்கமாக
அம்மிக்கல் மேல் விழுந்திருக்கிறாள் என்று கூறப்பட்டிருந்தது. வழக்கின் தீர்ப்பில் நீதிமன்றம், சந்தர்ப்ப சாட்சியங்கள் வேலுவை குற்றவாளியாக நிரூபித்திருந்தாலும் போராட்டத்தின் போது செல்விக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமாகி அம்மி கல்லின்
மேல் விழுந்து மரணமடைந்தாள் என்றும், மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டதை
முக்கியமாக கருத்தில் கொண்டது.
மேலும், செல்வியின் மலடி என்ற பிறவி குறையை ஈடிகட்ட, வேலுவின் குடிவெறியை மாற்றவோ அல்லது கட்டுபடுத்தவோ அவள் வாழ்நாளில் முயற்சிக்கவில்லை.
அவன் குடி பழக்கத்திற்கு பல சந்தர்பங்களில் தன் நகைகளை கொடுத்தும்
உதவியிருக்கிறாள். செல்வி மலடி என்று
தெரிந்தும், மற்றவர்கள் அவனுக்கு வேறு திருமணம் செய்ய
முயற்சித்தும், வேலு செல்வியுடன் சேர்ந்து அன்பாகவும், பாசத்துடனும் வாழ்ந்ததற்கு போதிய ஆதாரங்களும் உள்ளன. அந்த
இரவில் அவன் அறியாமல், தற்காலிக வெறியில் நடந்து கொண்டதில்,
செல்வியின் மரணம் நடந்தது என்றாலும், அவளிடம் அவனுடைய கடந்த
பாச மனநிலைகளையும் இந்த வழக்கில் கருத்தில் எடுத்துக் கொண்டது. குப்பத்து தீ
விபத்தில் சிக்கிய குழந்தையை தனியாக
சென்று காப்பாற்றிய நிகழ்ச்சி மூலம் வேலுவின் மனிதாபபிமான மனநில வெளியானதையும்., நீதி மன்றம் கருத்தில் கொண்டது. மருத்துவ அறிக்கையும், சந்தர்ப சாட்சியங்களும் முரணாக இருக்கும்
நிலையில், செல்வியின் மரணம் ஒரு விபத்து என்ற முடிவெடுத்தது.
ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்க படாவிட்டாலும் ஒரு நிரபராதிகூட தண்டிக்க
படகூடாது..என்ற சட்டத்தின் நியதியையும் கருத்தில் கொண்டு,
வேலு ஒரு நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சாட்சி பொருளான செல்வியின்
தாலியையும் வேலுவிடம் திருப்பித் தர உத்தரவிட்டது.
விடுதலையாகி
வந்த வேலு, தான் நிரபராதியான நிலையை நினைத்து பார்த்தான்.
கொலை வழக்கில் மருத்துவ அறிக்கை சாதகமாக இருந்ததால்,
அவனுக்கு விடுதலை கிடைத்தது. இதை அவன் ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதமாக கருதினான். திருமணத்திற்கு பிறகு செல்வியின் வேண்டுகோளுக்கு
அவன் குடிப்பழக்கத்தை
நிறுத்தியிருந்தாலும், செல்வி பிறவியில் மலடி என்று
தெரிந்தபின், அந்த ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் அவன் மறக்கவும், அவளின் குறைபாட்டினால் எங்கே அவளை விட்டு போய்விடுவானோ என்ற சுயநல
நோக்கத்தோடும் அவனை மறுபடியும் செல்வி குடிக்கத் தூண்டியிதாலும், வெறும் பழக்கம், வெறியாக நாளடைவில் மாறி, அந்த இரவில் அவள் மரணத்திற்கே
காரணமாக இருந்தது.
செல்வியின்
இழப்பால்,
அவன் ஒரு அநாதையானதின்
தாக்கம் அவனை மிகவும் வாட்டியது. தன் பழைய குடிசையை வந்தடைந்தவுடன், சுற்றுமுற்றும் பார்த்து விட்டு உள்ளே
நுழைந்தான். அலங்கோலமாக இருந்த வீட்டில், செல்வி விழுந்த
மூலையில் அப்படியே இருந்த அந்த உறைந்த ரத்த கறை, வேலுவின்
கண்களை குளமாக்கின. கண்களை துடைத்துக் கொண்டே அந்த மூலையை சுத்தப் படுத்தினான். போராட்ட
பழைய இரவு நிழலாக தெரிந்து மறைந்தது. அவன் புது வாழ்க்கையை தொடங்க, அவனிடமிருந்த ஒரே சொத்தான செல்வியின் தங்க தாலியை அடகு வைத்து அந்த
பணத்தில் வாழ்க்கையை ஆரம்பிக்க முடிவு செய்தான். ஒரு அடகு கடைக்கு வந்து. அங்கிருந்த
மார்வாடியிடம் தாலியை காட்டி அதை அடகு வைத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்றும்
வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் என்றும் விசாரித்தான். மார்வாடி வேலுவிடம் அவன்
விலாசத்தையும் மற்ற விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு,
நகையை எல்லா கோணங்களிலும் ஆராய்ந்து, முடிவில் உரசி பார்த்தான்.
வேலுவை சிறிது நேரம் இருக்கச் சொன்ன மார்வாடி உள்ளே சென்று திரும்பிய சில நிமிடங்களில் திடீரென்று
காவல் துறை ஜீப் ஒன்று கடை வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து இன்ஸ்பெக்டரும்
இரண்டு போலீஸ்கார்களும் இறங்கினர்., வேலு ஒன்றும் புரியாமல் குழம்பியிருந்தான். சில
நிமிடங்கள் இன்ஸ்பெக்டர் மார்வாடியிடம் பேசிவிட்டு வேலுவிடம் நகை பற்றி விவரங்கள்
கேட்டார். அது இறந்து போன, தன் மனைவியின் தாலி என்றும், அவள் கொலை வழக்கில் தான் நிரபராதியாக முந்திய நாள் விடுதலை ஆனதும், தன்னிடம் பணம் எதுவும் இல்லாததால், தாலியை அடமானம்
வைக்க வந்ததாகவும் கூறினான். இது எத்தனை பவுன் என்ற கேள்விக்கு இரண்டு பவுன் என்ற
பதில் வர, இன்ஸ்பெக்டர் வேலுவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை
விட்டார்.. “இது திருட்டு நகை. நேற்று மாலை நெல்லிக் குப்பத்து வழியாக போன ஒரு
பெண்ணின் கழுத்திலிருந்து இந்த தாலியை எடுத்திருக்கிறாய். நீ அந்த நெல்லி குப்பத்துவாசிதானே.
நீ தான் திருடி இருக்க வேண்டும். ஸ்டேஷனுக்கு போக வண்டியிலே ஏறு” என்று அலறினார். ஸ்டேஷனில் வன்முறையை
பயன்படுத்தி வேலுவை குற்றத்தை ஒத்துக் கொள்ள சொல்லி ஜெயிலில் அடைத்தார்.
சிறையின்
கம்பிகளை எண்ணிக்கொண்டே, அவன் செய்யாத
தாலித் திருட்டில் குற்றவாளியாக சிறையில் இருப்பதை நினைத்து வேலு பொருமினான். அப்பொழுது
அவன் மனச்சாட்சி விஸ்வரூபம் எடுத்து. செல்வியின் மரணத்திற்கு வேலுதான் காரணம்
என்று எதிரொலித்தது. அதன் விசாரணையில், சட்டத்தின் வரிகளும், சந்தர்ப்ப சாட்சியங்களும் கைகொடுக்க, கடந்தகால
வாழ்க்கையில் அவனுடைய மனிதாபிமான செயல்களும் உதவ, மருத்துவ
அறிக்கையும் சேர்ந்து, நீதிமன்ற தீர்ப்பில் நிரபராதி
என்றாலும், பராம்பரிய பண்பாட்டின் அடையாளமான செல்வியின்
தாலியை பறிப்பதற்கு போராட்டத்தை ஆரம்பித்ததே வேலுதான். செல்வியிடம் வேலு வெறியுடன்
வன்முறையில் நடந்து கொண்டதால், அவளுக்கு நெஞ்சு வலி வர, மயக்கமாகி விழுந்து மரணமடைந்தாள்.
இந்த நிகழ்வுகளையும் ஆராய்ந்து நீதிமன்றம் அவனை தண்டித்திருக்க வேண்டும். அங்கு பெற
வேண்டிய தண்டனையை ஈடுகட்ட, விதி, செய்யாத
திருட்டு குற்றத்தின் மூலம், அவனை சிறைக்கு அனுப்பி
தீர்ப்பளித்தது. .
No comments:
Post a Comment