Thursday, September 20, 2018


P.Krishnamoorthy

நான் என் சிநேகிதியின் வீட்டு கல்யாணத்திற்கு போனபோது முகூர்த்திற்கு இன்னமும் அரை மணி நேரம் இருந்தது. மோகன ராகத்தில் நாதஸ்வரம் அமர்களமாக சஞ்சாரம் செய்து கொண்டிருந்தது. பெண் வீட்டுகார்கள் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தனர். தாம்பூலத்தட்டில்  திருமாங்கல்யத்துடன் ஒவ்வொருவரிடமும் ஆசீர்வாதம் வாங்க வந்த நபரை கண்டவுடன் என் உடம்பெல்லாம் வியர்த்தது. வந்தவரும் என்னிடம் தட்டை நீட்டியபடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் சிறிது நேரம் மெளன மொழியில் பேசிக்கொண்டிருந்தோம். பக்கத்தில் நான்கு வயது பெண் “அப்பா! அம்மா உன்னை கூப்பிடுறா” என்றாள். இதிலிருந்து அவர் கல்யாண்ம் ஆனவர் என்று தெரிந்து கொண்டேன். “சார்! தட்டை இங்கே கொண்டாங்க” என்று பக்கத்து இருக்கையில் இருப்பவர்  கேட்ட பிறகு தான் அவர் என்னிடமிருந்து நகர்ந்தார்.  ஆம் பல வருடங்களுக்கு பிறகு சத்தீஷை பார்த்தேன்.
      
       கிட்டத்தட்ட எட்டு வருடத்திற்கு முன்னால் நடந்த காட்சிகளெல்லாம் என் மனத்திரையில் ஓடின. என் கல்லூரி வாழ்கையில் நான் ஒரு உல்லாச பறவையாக இருந்தேன். வசதியான வீட்டில் ஒரே பெண்ணாக பிறந்து பொருப்பேதும் இல்லாம் வளர்ந்த எனக்கு, வாழ்க்கை ஒரு விளையாட்டாகவே இருந்தது. எந்த பொருப்பும் இல்லாத சூழ்நிலையில், பருவ உணர்ச்சியால் உந்தப்பட்டு ஆண்வர்கத்தின் ஈர்ப்புக்கு நானும் பலியானேன். சத்தீஷ் என்னுடன் படித்த சகமாணவன். நல்ல உயர்த்துடனும் வசீகர நிறத்துடனும் யாரையும் மயக்கும் அழகானவன். சராசரி அழகான எனக்கு, அவன் பார்வை என் மேல் விழ நான் ஒரு அதிர்ஷ்ட்டசாலியாகவே  கருதினேன். இதனால் என் சிநேகிதிகளின் பொறாமை கண்களும் என் மேல் விழாமல் இருக்கவில்லை. நானும் சத்தீஷும் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம்.  அடுத்தடுத்து நடந்த சந்திப்புகள் சுவையாக அமைந்துவிட, சந்திக்கமுடியாத சில நிமிடங்கள் கூட பல யுகங்களாக தோற்றமளித்தன. இந்த அனுபவத்தின் தனித் தன்மையை எந்த அனுபவங்களும் ஈடு கட்ட முடியாது. கல்லூரி வாழ்க்கையின் கடைசி வருடம். நானும் சத்தீஷும் எங்கள் எதிர்கால வாழ்க்கையில் கணவன் மனைவியாக எப்படி வாழ்ப்போகிறோம் என்பதை கற்பனை கோட்டையில் அலசினோம். ஆனால் அப்படி காலமும் காட்சியும் முற்றிலும் மாறுபடும் என்று நாங்கள் நினைக்கவேயில்லை.
      
       இந்த மானிட மனதுக்குத்தான் எத்தனை சுயநலம். தனக்கு ஒன்று பிடித்துவிட்டால், அதை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று அதற்கு ஒரு வெறி. வாழ்க்கை நிஜங்கள் இதற்கு முரண்பாடாக அமைந்தாலும் அதை சிறிதும் பொருட்படுத்தாது தன் சுயநல தேவையை அடைய  பிடிவாதம் செய்வது, மனதின் திருவிளையாடலில் ஒன்று. ஆனால் விதியின் சதிக்கு யாரும் விலக்கல்ல.
      
       சத்தீஷ் தன் பெற்றோர்களை பார்த்து எங்களது திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவர அமெரிக்கா சென்றான். அதன் பிறகு நாட்கள் ஒடி மாதங்கள் ஆயின. ஒரு தகவலும் சத்தீஷிடமிருந்து வராத நிலையில்,என் தாயும் இருதய நோயால் அவதிப்பட்டு உயிருக்கு போராடி இருந்த நிலையில் எனக்கு கல்யாணம் செய்து பார்க்கவேண்டும் என்ற நிர்பந்ததில், ரமேஷுக்கு கழுத்தை நீட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் சிறிது காலம் என் மனது சஞ்சலபட்டாலும், புது வாழ்க்கையை அமைதியாக ஏற்றுக்கொண்டேன். விரும்பிய வாழ்க்கை அமையாவிடில் அமைந்த வாழ்கையை விரும்பி விடு என்று எங்கேயோ படித்த ஞாபகம்.
      
       ஆனால் இன்று சத்தீஷ் பார்த்தபிறகு மலரும் நினைவுகள்  காட்சிகாளாக உணர்வுகளின் மேல் தளத்தில் அலைகளாக மோதின. இந்த நிலை மனசாட்சிக்கு முரண்பாடாக இருந்தாலும், பல வருடங்களுக்கு பிறகு சத்தீஷை பார்த்தது, உணர்ச்சிகளுக்கு ஊக்கமளித்து, என் மனசாட்சிக்கு திரைபோட்டது. ஒரு வேளை சத்தீஷை திருமணம் செய்து கொண்டிருந்தால்,எங்களது வாழ்கை மகிழ்ச்சியாக கல்லூரி வாழ்கை  போல அமைந்திருக்குமென நினைத்தேன். உள்ளத்தில் எழும் எண்ணங்கள் எப்பொழுதும் என்றென்றும் ஒன்றாகவே இருந்ததில்லை. இப்படி என் சத்தீஷின் நினைவுகள் என்னை மகிழ்வித்ததால், அக்னி சாட்சியாக ரமேஷின் கரம் பிடித்த பவித்திரமான தாம்பத்திய உறவிற்கு துரோகமல்லவா நான் செய்கிறேன். எங்களது எட்டு வருட உறவில் எங்களுக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கத்தை தவிர ,வேறு எந்த குறையும் எனக்கு ரமேஷ் வைக்கவில்லை.  ஒரு வேளை நான் சத்தீஷை மணந்திருந்தால் இதற்குள் தாய் ஆகி......இந்த எண்ணமே என்னை குழப்பியது. நான்கு வருட பொருப்பில்லாத கல்லூரி வாழ்க்கை, எட்டு வருட தாம்பத்திய வாழ்க்கைக்கு நியாய திராசில் எப்படி ஈடாகும்? இந்த எட்டு வருடத்தில் எவ்வளவு பொருப்புகள்,எத்தனை வித்தியாசமான வாய்ப்புகள், பல வகை மனிதர்கள் இவெயெல்லாம் நான் மறந்துவிட்டேனா என்ன? என்னை புடம் போட்டு பொருப்புள்ள பெண்ணாக மாற்றிய இந்த வாழ்க்கையை எப்படி மறக்கமுடியும்? இப்படி என் மனதில் ஒரு ஆத்ம விசாரணையின் ஆரம்பம். முடிவு! குற்ற உணர்ச்சிகளின் குமுறல். ரமேஷிடம் என் கடந்த கால  வாழ்கையை என்றாவது சொல்லி இருப்பேனா? இதற்கு தான் நம்பிக்கை துரோகம்  என்பார்களோ? ரமேஷ் அலுவலக வேலையாக நான்கு நாட்கள்  பம்பாய் சென்றிருக்கிறார். வந்தவுடன் முதல் வேலையாக, இன்று சத்தீஷை பற்றி பேசவேண்டும் என்று முடிவெடுத்தேன்.
      
       அந்த நான்கு நாட்களும் ஓடிவிட்டன. ரமேஷ் ஏர்போர்ட்டிலிருந்து தான் வந்து விட்டதாக டெலிபோனில் பேசினார்.  என் மனதில் ஒரே குழப்பம். வந்தவுடன் எப்படி ஆரம்பிப்பது என்று. ஒரே மணி நேரத்தில் வீட்டை அடைந்த ரமேஷின் முகம், வாடி களைப்பாக இருந்தது. சாப்பாட்டை முடித்துவிட்டு ஹாலில் இருந்த சோபாவில் உட்கார்ந்தார். “ஏன் வந்ததிலிருந்து மிகவும் டல்லாக இருக்கிறீர்கள்? என கேட்டேன். “ஏதோ சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் முடியவிலை. என்று இழுத்தார. மறுபடியும் சில நிமிட மெளனம்.
      
       “இதுவரை நான் ஒரு விஷயத்தை உன்னிடம் மறைத்து விட்டேன். நம் கல்யாணத்திற்கு முன் நான் ஷீலா என்ற பெண்ணை கல்லூரி நாட்களிலிருந்தே காதலித்தேன். எங்கள் திருமணம் நிச்சயமாகி பிறகு கல்யாண மண்டபத்தில் நின்று போயிற்று.  காரணம், யாரோ சொந்தகாரர் ஒருவர் ஜோஸ்யம் பார்ததில் எங்கள் திருமணத்தால் புத்திர பாக்கியம் எங்களுக்கு இல்லாமலே போய்விடுமாம். நான் இப்பொழுது பம்பாய் சென்றிருந்த போது, என் அலுவலக நண்பரின் வீட்டிற்கு சாப்பிட போயிருந்தேன். அங்கே எதிர்பாராமல் ஷீலா அந்த நண்பரின் மனைவியாக இருந்தாள். என் கடந்த கால காதலி இப்பொழுயது மற்றொவன் மனைவியாக எனக்கு அறிமுகமான போது என் மனதில் ஒரு எரிமலயே வெடித்தது. அப்படி ஒரு எண்ணம் என் மனதை பாதித்திருந்தால்  நான் மாத்திரம் இன்னொருத்திக்கு கணவன் ஆனது எந்த விதத்தில் நியாயம்? அவளும் நானும் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் மெளனமாக பார்த்து கொண்டாலும் அந்த பார்வையில் எவ்வளவோ அர்த்தங்கள் இருந்தன. எந்த சொந்தகாரர்  குழதை பேறு எங்களுக்கு இல்லை என்று எங்கள் கல்யாணத்தை நிறுத்தினாரோ அவருடைய மகனைத்தான் ஷீலாவிற்கு திருமணம் செய்து இருக்கிறார்கள். உள்ளேயிருந்து ஒடி வந்த நான்கு வயது  பெண்ணை அவர்களின் தத்து எடுத்து வாரிசாக என் நண்பர் அறிமுகம் செய்து வைக்கும்போது, ஷீலா குற்ற உணர்ச்சியுடன் என்னை பார்த்தது என் நெஞ்சை நெகிழ வைத்தது. கல்லூரி நாட்களில் ஷீலாவின் அழகை பற்றி பேசாதவர்களே இல்லை. அவள் துடுக்கான பேச்சும் துள்ளித் திரியும்இளம் சிட்டாக சுற்றி வந்த ஷீலாவா இப்படி அமைதியாக இருக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டு போனேன். கல்லூரி நாட்களின் முதல் காதல் என்றும் மறக்க முடியாதது. என் கடந்த கால காதல் கதையை நான் உன்னிடம் இத்தனை நாட்கள் சொல்வதா வேண்டாமா என்று என் மனம் ஆத்ம விசார்ணையில் குற்றவாளியாக நிற்க,சொல்லியே ஆகவேண்டும் என்ற தீர்ப்பில் சொல்லிவிட்டேன்” என்றார். இதைச்  சொன்னவுடன் ரமேஷின் முகத்திலிருந்த குழப்பம் நீங்கி ஒரு தெளிவு தெரிந்தது.
      
       என்னுடய ஆத்ம விசாரணையின் தீர்ப்பு போல ரமேஷின் தீர்ப்பும் அமைந்தது எனக்கு வியப்பாக இருந்தாலும், அது எனக்கு சாதகமாகவே இருந்தது. இதுவரை சொல்லாத என் காதல் கதையை சுலபமாக இனிமேல் சொல்ல முடியும். இருவரும் குற்ற உணர்ச்சி கொண்டவர்கள் ஆயிற்றே1
      
       மகிழ்ச்சியான மண வாழ்க்கையை ஒரு தம்பதியினர் அனுபவிக்கும் போது அவர்களின் தனித்தனியான கடந்தகால காதலர்களை மலரும் நினைவுகளாக விதிவசத்தால் சந்தர்ப சூழ்நிலையில் சந்தித்ததில், ஆழமாக மனதில் புதைக்கப்பட்டு இருந்த குற்ற உணர்ச்சிகள் விஸ்வரூபம் எடுத்து பிராயசித்ததை தேடி கொள்கின்றன.
      
       ரமேஷிடம் ஆரம்பத்திலிருந்து சத்தீஷை கல்யாண வீட்டில் பார்த்த வரை விவரித்தேன். சத்தீஷின் பெண் குழந்தையை பற்றி சொன்ன பொழுது “நீ சத்தீஷை மணந்திருந்தால் இதற்குள் புத்திர பாக்கியம் உனக்கும் கிடைத்திருக்குமென” அவர் சொன்னது எதையோ சுட்டிக் காட்டுவது போல் இருந்தது. எப்படியோ எங்களிருவரிடையே இருந்த ரகசியங்கள் வெளியாகி பெரு மூச்சு விட்டோம். ‘”விரும்பிய வாழ்க்கை அமையாவிடில் அமைந்த வாழ்கையை விரும்பிவிடு” என்ற வரிகள் ஞாபகத்திற்கு வர  இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக் கொண்டோம்.
      
       காலிங் பெல் சத்தம் கேட்டு வாசல் கதவை திறந்தேன். என் சிநேகிதி டாக்டர்  கல்யாணி, வீட்டிற்கு போகும் வழியில் வந்திருந்தாள். அவள் எங்களுடைய டெஸ்ட் ரிப்போர்ட்டின்படி ரமேஷுக்கு எந்த குறையும் இல்லை என்றும், நான் மட்டும் சில மருந்துகள் சாப்பிட்டால் சீக்கிரமே எங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று சொன்ன வார்த்தைகள் மாத்திரம் எங்கள் செவிகளில் மதுர கீதமாக கேட்டது.