மெளனத்தின் எல்லை
பி.கிருஷ்ணமூர்த்தி
அந்த வீட்டில் தனியாக ஊஞ்சலில் சோகத்தின் சிகரமாய் உட்கார்ந்திருந்த சுந்தரம், சுவற்றிலிருந்த பத்து வருஷத்திற்கு முன் எடுத்த தன் கல்யாண போட்டோவை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார். கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் தரையில் விழ எதோ வாழ்க்கையில் முக்கியமான உறவை இழந்து விட்டது போன்ற உணர்ச்சியில் தத்திளித்தார். ஆம்! அன்றுதான் தன் தந்தைக்கு பத்தாம் நாள் காரியமும், அதற்கு அவர் மனைவி பவித்திராவுடன் ஆற்றங்கரைக்கு சென்ற இடத்தில், பவித்திராவை ஆற்றில் முழுக விட்டு, அவளுடைய சாவின் சடங்குகளையும் சேர்த்து முடித்து விட்டு திரும்பிய அவரை தனிமை வாட்டியது. அவரது நினைவலைகள் கடந்த நிகழ்வுகளுக்கு அவரை தள்ளி செல்ல, சிலையாக மாறினார்
பூங்குளம் கிராமத்தில்
முப்பத்திஐந்தை வயதை முடித்து விட்ட சுந்தரத்தின்
வாழ்க்கையில் எந்த வித புயலும் இல்லாமல் அதுவரை அமைதியாக ஓடிக்
கொண்டிருந்தது. அழகான மனைவி பவித்திரா, தந்தை சதாசிவம் இவர்களுடன், வீட்டின் ஒரே பிள்ளையாக, கெளரவமான தாசில்தார் வேலையுடன் வாழ்ந்து வந்தார். அவர்களது ஒரே குறை, திருமணம்
முடிந்து பத்து வருட தாம்பாத்திய வாழ்க்கையில் குழந்தை இல்லாதது ஒன்றுதான் அந்த
குடும்பத்தை மிகவும் வாட்டியது. இதனால்
அவர்கள் இருவரும் ஒருவித தாழ்வு மனபான்மையில் சிக்கி தவத்தனர். இருவரும் ஒருவரை
ஒருவர் குற்ற உணர்ச்சியில் எப்பொழுதும் பார்த்து கொண்டனர். .
பக்கத்து டவுனில்
அடுத்த மாதம் மருத்துவ முகாம் ஒன்று நடக்க போவதாகவும், அதற்கு வரும் லேடி டாக்டர் மிகவும் பெயர்
பெற்றவர் என்றும், அவரை பார்த்து குழந்தை பிறக்காத குறைக்கு
எதாவது மருத்துவ ரீதியில் தீர்வு காண முடியுமா என்று கேட்டு பார்க்கலாம் என்று பக்கத்து தெரு சுபத்திரா
மாமி பவித்திராவிடம் ஒரு நாள் கோவிலில் சொன்னாள். பவித்திரா சுந்தரத்திடம் இதை
பற்றி கேட்க, அவரும் அதற்கு சம்மதம் சொல்ல, பவித்திரா எதோ உடனே குழந்தையை
பெற்று விட்டது போலவே உணர்ச்சி வசப்பட்டாள். சுந்தரம் பவித்திராவின் முகத்தில் என்றும் இல்லா மகிழ்ச்சியை அன்றுதான் கண்டார்.
! தாரமான பிறகு தாயாவதில் பெண்களுக்குதான் எத்தனை பெருமை! சாதாசிவமும் “கடவுள் கண்ணை திறப்பாரும்மா.
கவலைப்படாதே” என்று சொன்ன வார்த்தைகள் பவித்திராவின் செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டே
இருந்தது.
மறுநாள் காலை
காப்பியை எடுத்து கொண்டு சதாசிவம் அறைக்கு வந்த பவித்திராவிற்கு ஓர் அதிர்ச்சி
காத்திருந்தது. எவ்வளவு எழுப்பியும் அவர் எழுந்திருக்காததால் அவள் சுந்தரத்தை
கூப்பிட்டு பார்க்க சொன்னாள். சுந்தரம் பார்ததில் சதாசிவம் இரவு தூக்கத்திலேயே
இறந்துவிட்டது தெரிந்தது. எல்லா உறவினர்களும் இரங்கலுக்கு வீட்டுக்கு வந்து போக, தந்தையின்
இறுதி சடங்குகளை ஆற்றங்கரையில் முடித்து வீடு திரும்பினார் சுந்தரம். வீட்டில்
பவித்திராவை தனியே விடாமல் அக்கம்பக்கத்து மாமிகள், கூட இருந்தது
சுந்தரதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. கூடவே
பத்தாம் நாள் சடங்குகளுக்கு புரோகிதருடனும் பவித்திராவுடனும் கலந்து எல்லா ஏற்பாடுகளும்
செய்து விட்டு, அன்று
காலை எட்டு மணியளவில் ஆற்றங்கரைக்கு போகும் வழியில் புரோகிதரை கூட்டிச்
செல்வதாகவும் முடிவு செய்தார். அதற்காக வேலுவின் வண்டியும் ஏற்பாடும் செய்தார்.
அன்று
சதாசிவம் இறந்து பத்தாம் நாள். காலையில் சீக்கிரமே வேலு தன் இரட்டை மாட்டு
வண்டியுடன் வந்து குரல் கொடுத்தான். சரியாக எட்டு மணிக்கு வீட்டை விட்டு
சுந்தரமும் பவித்திராவும் வண்டியில் ஏற, ஏறு முன் “ஏன்னா! இந்த வண்டி செளகரியமாக இருக்காதே. வேறே வண்டி எதுவும் கிடைக்கவில்லையா” என்றாள் பவித்திரா. “அம்மா! இது புது வண்டிங்க.
ரொம்ப செளகரியமாய் இருக்கும்” என்றான் வேலு. பிறகு ஆத்தங்கரையை நோக்கி வேலுவின் வண்டி வேகமாக பறந்தது. போகிற வழியில், சுந்தரம் வண்டியை நிறுத்தச் சொன்னார். “சாமி! நான் போய் புரோகிதரை கூட்டி
வரட்டுமா?” என்று கேட்ட வேலுவிடம், சுந்தரம்
“வேண்டாம். நான் அவரிடம் மற்ற விஷயங்களும் பேசணும். நானே
போகிறேன்” என்று வண்டியை விட்டு கீழே இறங்கினார்.
மெயின் ரோடிலிருந்து
ஒத்தடி பாதையில் கிட்டதட்ட இரண்டு மைல் தொலைவில் இருந்தது அந்த புரோகிதர் வீடு.
சுந்தரம் நடக்க ஆரம்பித்து அரை மணி நேரத்தில் புரோகிதர் வீட்டை அடைந்தார். அவருடன்
எல்லாவற்றையும் பேசிவிட்டு, புரோகிதர் நேராக ஆத்தங்கரைக்கு வருவதாக
சொன்னதும், சுந்தரம் அங்கிருந்து கிளம்பி வண்டியை
அடைந்தார். ஆத்தங்கரையை அடைய காலை பத்து
மணிக்கு மேல் ஆகிவிட்டது.
ஆத்தங்கரையில்
ஒரு மண்டபத்தின் வாசலில் முதலில் பவித்திராவும் பிறகு சுந்தரம் இறங்க, வேலு வண்டியை ஒட்டி சென்று ஒரு மரத்தின்
கீழ் கட்டி, அவனும்
மரத்தடியில் உட்கார்ந்து கொண்டான். அவர்களை தொடர்ந்து புரோகிதரும் அங்கு வர, சுந்தரத்தை ஆற்றில் குளித்து வர சொன்னார். ஆனால் பவித்திரா பிடிவாதமாக முதலில்
குளிக்க முன் வர, சுந்தரமும் அவள் குளித்து வருவதற்குள்
மண்டபத்தில் சில வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார். ஆற்றில் வெள்ளம் இருகரைகளின்
உயரத்திற்கு நல்ல வேகத்துடன் புரண்டோடியது
சடங்குகளுக்கு
வேண்டியதை தயார் செய்துவிட்டு புரோகிதர் சுந்தரத்தை குளித்து வரச் சொன்னார். பவித்திரா
திரும்பி வர காத்திருந்த சுந்தரம், வெகு நேரமாகியும் அவள் வராதது அவருக்கு
கவலையாக இருந்தது. ஆற்றையே பார்த்து கொண்டிருந்த சுந்தரத்தின் பார்வைக்கு அவள்
குளிக்க போன இடத்திலிருந்த அவள் உடல்தான் மேலே மிதந்து வேகமாக வெள்ளத்தில் அடித்து செல்வது தெரிந்தது.
”பவித்திரா! பவித்திரா என்னை விட்டுட்டு போகாதே”
என்று உச்ச ஸ்தாதியில் அலறி, மயக்கமாக
கீழே சாயவும், இதை கேட்ட புரோகிதரும்,
தூரத்திலிருந்த வேலுவும் ஒடி வந்து அவரை தாங்கி பிடித்தனர். வெள்ளத்தில் மிதந்து போகும் பவித்திராவை
பார்த்ததும், வேலு ஆற்றில் குதித்து காப்பாற்ற போனான். குதித்த
சில நிமிடங்களில் அவனும் ஆற்றில் மூழ்கி இன்னொரு பக்கமாக அவனுடைய உடலும்
வெள்ளத்தில் அடித்து சென்றது. பவித்திராவின் உடல் மாத்திரம் ஆற்றில் கொஞ்ச தூரத்திலுள்ள
ஒரு பாறையில் அடித்து நின்றது. அங்கு
சிலர் ஆற்றில் குதித்து பவித்திராவின் உடலை மீட்டனர். வெள்ளத்தின் வேகத்தில்
வேலுவின் உடல் மட்டும் கிடைக்கவே இல்லை. புரோகிதரும் மற்றவர்களும் சுந்தரதிற்கு
ஆறுதல் சொல்லி பவித்திராவுக்கு இறுதி சடங்குகளையும் தந்தைக்கு பத்தாம் நாள்
காரியமும் செய்ய வைத்தனர். மிகுந்த
சோர்வுடன் காணபட்ட சுந்தரம் வண்டியை தானே ஓட்டி கொண்டு வீடு திரும்பும் வழியில், புரோகிதரை அவர் வீட்டிற்கு செல்லும் ஒத்தடி
பாதையின் ஆரம்பத்தில் இறக்கி விட்டார். புரோகிதரும் வண்டியை விட்டு இறங்கிய
சுந்தரத்திற்கு ஆறுதல் சொல்லி விடை பெற்றார். வண்டி நின்ற இடத்தின் கீழே கண்ணாடி
வளையகள் உடைந்து கிடப்பதை பார்த்தவுடன்
சுந்தரம் சிறிது குழம்பி போயிருந்தார். அந்த இடத்தை சுற்றியும்
வண்டிக்குள்ளும் நன்றாக பார்த்தார். அந்த சுற்று புறத்தில் காலடிகளின் தடையங்களும், வண்டிக்குள் கண்ணாடி வளையல்
துண்டுகளும் கிடந்தன. ஒரு மூலையில் தங்க மோதிரமும், தீப்பெட்டி ஒன்றும் இருந்தது. வண்டிக்குள் எதோ
போராட்டம் நடந்த அறிகுறிகள் தெரிந்தன. வேலுவின் பையிலிருந்த தீப்பெட்டியும்
கையிலிருந்த மோதிரமும் எப்படி வண்டிக்குள் வந்தன? இப்படி ஒவ்வொன்றையும்
பார்க்க பார்க்க சுந்தரதின்
சந்தேகத்துக்கு சாட்சியங்களாக அமைந்தன. மேலும் இவை எல்லாம் போராட்டத்தின்
பரிமாணத்தை உணர்த்தின. புரோகிதர் வீடு வரை
சுந்தரத்திடம் நன்றாக பேசிக்கொண்டு வந்த
வேலு, பிறகு மெளனமாக
வந்தது இப்போது சுந்தரத்தின் சந்தேகத்தை பல படுத்தியது. முதலில் வேலுவிடம் பார்த்த தீப்பெட்டியும்
மோதிரமும் வண்டிக்குள் வந்திருப்பது இருவர் கைகலப்புக்கு முக்கிய சாட்சியங்கள். ஆற்றில் பவித்திராவின் உடல் மிதக்கும்போது, சுந்தரம்
அலறி மயக்கமாக சாய்ந்த நிலையில் வேலு ஒடி வந்து “அய்யா! இந்த ‘பாவி’ போய் அம்மாவை காப்பாத்திரேன்” என்று சொன்னது இப்பொழுது அவர் செவிகளில் எதிரொலித்தது. வேலு எதற்காக எப்பொழுது ‘பாவி’ ஆனான்? .குழம்பிய நிலையில் வீட்டை அடைந்தார் சுந்தரம்..
விதியின்
சதியால் இனி அவர் தனிமை நிலையில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அவரது
நினைவு அலைகள் மறுபடியும் வண்டியிலிருந்த
கண்ணாடி துண்டுகளின் காட்சியை கண் முன் நிறுத்தின. சுந்தரம் அன்று நடந்ததை எல்லாம்
நினைவு படுத்தி அவர் குழப்பத்திற்கு ஒரு விடை கிடைக்குமா என்று பார்த்தார். .
அவருக்கு ஏற்பட்ட சந்தேகம் அவர் வாழ்க்கையின் அடித்தளத்தையே ஆட்டி வைக்கிற ஒரு
பூகம்பம். இதை யாரிடமும் கலந்து பேச முடியுமா என்ன? . நிச்சயமாக நடந்த போராட்டத்தில் பவித்திரா இருந்தாள் என்பதற்கு வளையல் துண்டுகள் வண்டிக்குள் கிடந்ததில்
சாட்சியமாக இருந்தன. வேலு ஒருவன்தான்
அப்பொழுது வண்டியில் இருந்தான். அப்பொழுது இருவருக்கும் தான் போராட்டம்
நடந்திருக்கிறது. எதற்காக அவர்கள் போராடினார்கள் என்பதை மனதுக்குள் அலசினார். நினைத்து கூட
பார்க்க முடியாத காட்சிகள் அவர் கண் முன் தோன்றின. இதெல்லாம் அங்கு நடந்ததா என்ன? சுந்தரம் துடித்து போனார்.
வீட்டை விட்டு
கிளம்பும் போதே, பவித்திரா, வேலு வண்டிக்கு பதில் வேறு வண்டிக்கு சொல்லியிருக்கலாமே என்பதை மறை
முகமாக சொன்னது ஞாபகத்துகக்கு வந்தது. புரோகிதர் வீட்டிலிருந்து திரும்பியதும்
ஆற்றங்கரைக்கு போகும் வழியில் வண்டியில் எந்த கேள்விக்கும் பவித்திராவின் மெளனம்
பதிலாக வந்ததற்கு காரணம் அப்பொழுது தான் சுந்தரதிற்கு புரிந்தது. மேலும் வண்டியில்
பவித்திரா சுந்தரத்தை விட்டு சற்று
விலகியே அவர் மேல் படாமல் உட்கார்ந்து வந்தாள். அவரை நேருக்கு நேர் பார்ப்பதையும்
தவிர்த்தாள். போராட்டத்தில் பவித்திரா
வேலுவிடம் ஒரு வேளை தோற்று போயிருப்பாளோ? நினைவலைகளில் இந்த எண்ணம்
சுந்தரத்தை மன வலியால் கொடூரமாக தாக்கின..
இருவரின் கைகலப்பில் உடைந்த கண்ணாடி
வளையல்களால் ஏற்பட்ட கை காயங்களை மறைக்க புடவை
தலைப்பால் அவளுடைய கைகளை மறைத்து வந்தாளோ? இப்படி பல
சந்தேகங்கள் சுந்தரத்தை வாட்டியது.. அவள் போராட்டத்தில் தோல்வியோ அல்லது வெற்றியோ
அடைந்திருந்தாலும், தன் மேல் மாற்றான் கை விழுந்ததே அவள் கணவனுக்கு
செய்த மன்னிக்க முடியாத பெரிய துரோகம் என்ற
மன நிலையில் தான் ஆற்றில் குளிப்பதற்கு
அவள் முந்தி கொண்டு சென்றது, ஆழம் பார்க்காமல்
தண்ணீரில் முழுவதும் மூழ்கி அதிலிருந்து மேலே
வருவதற்கு எந்த வித முயற்சியும் எடுக்காதது.
இதெல்லாம் தன்னை நிரந்தரமாக அழித்து கொள்ள
பவித்திரா செய்தது என்று சுந்தரின் உள் மனதின் ஆதங்கம்.
வேலுவின் மரணம்
தியாக எண்ணத்திலா அல்லது குற்ற உண்ர்ச்சியிலா என்பது விவாதத்துக்குரியது. அந்த
போராட்டத்தில் அவன் எண்ணியதை அடைந்தானா அல்லது பவித்திராவின் கடுமையான எதிர்ப்பினால்
தோற்று போனான என்பது இருவருக்கு மட்டும் தெரிந்த விஷயம். உலகத்துக்கு அது வெளிப்படாத ஒன்று. வேலு நிச்சயமாக குற்றம் செய்தவன்.
பவித்திராவை அவன் கெட்ட எண்ணத்தோடு அணுகியதே முதல் குற்றம். அவன் சாவு அவனுக்கு கிடைத்த சரியான தண்டனை.
அவன் ‘பாவி’ என்று ஆற்றில் குதித்து பவத்திராவை காப்பற்ற போனது ஒரு பாவ
மன்னிப்புக்காக இருக்கலாம். அதை
பிராயசித்தம் என்று எப்படி நியாய படுத்த முடியும்? இதுதான் அவர் மனசாட்சியின் வாதம்.
பவித்திரா ஆற்றில்
இறங்கும் வரை நீடித்த மெளனத்தின் உள் நோக்கம் சுந்தரதிற்கு இப்பொழுது புரிய
ஆரம்பித்தது. மன குமுறலில் அவளால் வெளியில் சொல்ல முடியாத ஒரு அருவறப்பான சம்பவத்தில் தான் ஒரு
கதாநாயகியாக இருந்து விட்டதையும், அதனால்
தன் கணவனேயே கண்களிருந்தும் நேர்க்கு நேர் பார்க்க முடியாத ஒரு தற்காலிக குருடியாக விட்டதையும், அந்த கேவலாமான ரகசியத்தை
அவளுடைய பெண்மை தன்மானத்தால்
வெளியே சொல்லாமல் தடுத்ததையும் – இவ்வளவையும் அந்த மெளன மொழியில் பவித்திரா வெளிபடுத்தி அவள்
கெஞ்சியது அவள் களங்கமில்லாதவள் என்று. .
போராட்டத்தில் ஈடுபட்ட இருவரும் இப்பொழுது உயிருடன்
இல்லை. யாரை போய் நிஜத்தை கேட்பது? எது
நடந்திருந்தாலும் தன்மானத்திற்காக பவித்திரா உயிரை விட்டிருக்கிறாள். அதற்கு
காரணமாய் இருந்த வேலுவை விதி, சாவின் மூலம் தண்டித்து விட்டது.
ஆனால் எல்லாம் முடிந்த நிலையில், சுந்தரத்தின் மனசாட்சி மட்டும், ஆற்றில் நடந்த ‘அக்னி பிரவேசத்தில்’ சாவை சந்தித்த பவித்திரா, புடம் போட்ட தங்கமாக வெளியில் வந்தாளா அல்லது களங்கத்தை சுமந்த பெண்ணாக
வந்தாளா என்ற கேள்விக்கு விடை கிடைக்காது அவர்
வாழ்நாள் முழுவதும் முடிவு தெரியாத முடிவை தேடி அலைந்தார். உலகம் இருவரின்
மரணத்தை ஒரு அசம்பாவித விபத்தாக ஏற்றுக் கொண்ட நிலையில், நடந்த
உண்மைகள் உறைந்த போன உண்மைகளாகவே இருக்க சுந்தரம் விரும்பினார்.