Friday, April 24, 2015


தீராத பசி

பி. கிருஷ்ணமூர்த்தி

பஸ் நிலையத்துக்கு வந்த முருகன்  பூங்குளம் செல்லும்   வண்டியில்      உட்கார்ந்தான்.          வண்டி முன்னே நகர, நினைவலைகள் முருகனை பின்னோக்கி  கடந்த கால நிகழ்வுகளுக்கு கூட்டி சென்றது.
                       
மலை தொடர்களின்   அடிவாரத்தில் பரந்த   செழிப்பான விளை நிலங்களையும்    தென்னந்  தோப்புகளையும்  வாழை தோட்டங்களையும்     கொண்டது அந்த பூங்குளம் கிராமம்.   அந்த நிலங்களின் சொந்தகார்கள்  பக்கத்து டவுனில்  இருக்க, விவசாய தொழிலில்    ஈடுபட்டு, குடிசைகளில் வாழும்  கூலி ஆட்களின் வாழ்க்கையில் வறுமையின் முழுமை  அள்ளி தெளித்து இருந்தது.  எப்பொழுதும் குடிபோதையில் இருந்த கணவனை இழந்து, அவன் அவளுக்கு விட்டு சென்ற ஒரே பரிசான ஐந்து வயது முருகனுடன் ஒரு குடிசையில் இருந்து  கொண்டு, அன்றாட கூலிக்கு கதிர் அறுப்பு போன்ற விவசாய வேலைகளை செய்து வாழ்ந்து வந்தவள் அஞ்சுகம்.  வேலை கிடைத்த நாட்களில்  இரண்டு  வேளை உணவும், மற்ற நாட்களில் பட்டினியின் துணையோடு படுத்த இரவுகள் எத்தனையோ! எந்த வேலையும் கிடைக்காத நாட்களில் இரவு வீடு திரும்பிய அஞ்சுகம், குடுசையின் உள்ளே முருகன் சுருண்டு படுத்திருந்த நிலையில் பசியால் வயிற்றை பிடித்து கொண்டு அழுது கொண்டிருந்தான். தன் மகனின் நோய் என்ன என்பதை எளிதாக புரிந்து கொண்ட அஞ்சுகம், உள்ளே சென்று இருந்த பானைகளை  திறந்ததில் அவை எல்லாம் காலியாக இருக்க, வேறு வழியில்லாமல்  முருகனை தோளில்  சுமந்து கொண்டு கொஞ்ச தூரத்தில் உள்ள  குடிசை வாசலில் நின்று. “அம்மா! குழந்தை பசியாலே துடிக்கிறது. எதாவது சாப்பிட கொடுங்க அம்மா” என்று கெஞ்சினாள். குடிசை கதவை திறந்து வெளியை வந்த செண்பகம், அஞ்சுகத்தை பார்த்து அரண்டு போனாள். “அஞ்சுகம் என்ன   கோலம் இது! வீட்டிலே மிஞ்சிய கஞ்சி கொஞ்சம் இருக்கு. அதை கொண்டுவரேன். உன் பிள்ளைக்கு கொடு. நீ பேசாமெ அவனை பக்கத்து ஊரிலே இருக்குற பள்ளிகூடத்திலே சேர்த்துடு. அங்கே மதிய உணவு நிச்சயமாக தினமும் கிடைக்கும். படிக்கவும் செய்யலாம்.” என்றாள். “எனக்கு யாரையும் அங்கே தெரியாதே” என்று அஞ்சுகம் பதிலளிக்க, தன் கணவன் மாணிக்கம் அந்த பள்ளியில் பியுனாக வேலை பார்பதாகவும் அவன் மூலம் ஏற்பாடு செய்வதாகவும் செண்பகம் சொன்னாள்.   தன் குடிசைக்கு திரும்பியவுடன் ஒரே மூச்சில் முருகன் அந்த பழைய கஞ்சியை மிச்சமில்லாமல் குடித்து விட்டு படுத்தான். அன்றும் அவளுக்கு கிடைத்தெல்லாம் உள்ளே பானையில் இருந்த கிணற்று நீர்தான். அதை குடித்து விட்டு, செண்பகம் சொன்ன பள்ளி பற்றிய ஏற்பாட்டில், தினமும் ஒரு வேளை உணவாவது கட்டாயமாக தன் மகனுக்கு கிடைக்குமே என்ற ஆறுதலில் நன்றாக தூங்கி விட்டாள். மறு நாள் காலை மாணிக்கம் முருகனை பள்ளிக்கு கூட்டி சென்று தலைமை ஆசிரியரிடம் மன்றாடி அவனை ஆரம்ப வகுப்பில் சேர்த்து விட்டான். அவ்வளவு  குழந்தைகளை ஒரே இடத்தில் பார்ததிலும், அவர்களுடன் விளையாடுவதிலும் முருகனுக்கு அளவில்லா மகிழ்ச்சி. மதிய நேரம் சத்தாகவும், அவன் இதுவரை பார்க்காத அதிக அளவிலும் உணவு கிடைத்தவுடன் முருகன் முகத்தில் அப்படியொரு அலாதி சந்தோஷம். இரவு அஞ்சுகம் குடிசைக்கு வந்ததும் முருகன் காத்திருந்து அன்றய பள்ளி அனுபவத்தையும், குறிப்பாக மதிய உணவை விவரிக்கும் பொழுது அதிலிருந்த காரம் இனிப்பு போன்ற சுவைகளை அவன் விவரிக்கும்போது அஞ்சுகம் அதை ரசித்து தன் பசியை மறந்தாள். 
        நாட்கள் விரைவாகவே நகர்ந்தன. ஒரு நாள் அறுவடை வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த அஞ்சுகம், முருகன் கைகளை தன் பின்னால் கட்டிக் கொண்டு நிற்பதை கண்டாள். அவன் முகம் வாடியிருப்பதையும் அவள் கவனித்தாள். “முருகா உனக்கு என்ன ஆயிற்று” என்று கேட்டாள்.. சிறிது மெளனத்திற்கு பிறகு, தன் வலது உள்ளங்கயை காட்டினான். அதில் பிரம்பால் அடித்த காயம் தெரிந்தது. “என்ன இது?” என்று ஆதங்கத்துடன் கேட்டாள். “வாத்தியாரு என்னை பிரம்பாலே அடிச்சாரு” என்று அழுது கொண்டே சொன்னான்.  “நீ என்ன தப்பு செஞ்சே?” என்று கேட்டாள். “நான் கணக்கிலே தப்பு பண்ணிட்டேன்” என்று தலையை குனிந்து கொண்டே அவன் சொன்னாலும், அவன் கண்கள் மட்டும் தன் தாயை பார்த்து கொண்டு, தனது இடது கையை நீட்டி அவள் கொடுக்கும் தண்டனைக்கு காத்திருந்தான். அதற்கு மாறாக அஞ்சுகம் அவனை வாரி அணைத்து “அப்போ மதியம் சாப்பாடு கிடைகல்லையா” என்ற கவலையோடு கேட்டாள். “கணக்கு வகுப்பு மதியத்திற்கு அப்புறம்தான் இருந்தது” என்ற அவன் பதிலில் அவனுக்கு மதிய உணவு அன்று கிடைத்தில் ஆறுதல் கொண்டாள். அவனோ அம்மாவின் அரவணைப்பில் அவளிடம் தண்டனை தப்பியது என்று பெருமூச்சுவிட்டான். “இனிமே நீ என்ன தப்பு செஞ்சாலும் மதியம் முடிஞ்சு செய். அப்போதான் உனக்கு தவறாமே சாப்பாடு கிடைக்கும்” என்று புத்திமதி கூறினாள். அஞ்சுகம் முருகனின் பசியை பற்றி கவலை பட்டாளே தவிர, அவன் செய்த தப்பு, கையிலுருந்த காயம் எல்லாம் அவளுக்கு பெரிதாக தெரியவில்லை. வறுமையின் தாக்கம் அவர்கள் வாழ்வில் அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
        அறுவடை காலம் ஆரம்பிக்க அதை சார்ந்த மற்ற வேலைகளும் தொடர்ந்து அஞ்சுகத்திற்கு கிடைக்க, இருவருடைய இரண்டு வேளை உணவு பிரச்சனையும் ஒரளவிற்கு சமாளிக்கப்பட்டது. கால சக்கரம் சீராக என்றும் சுற்றியதில்லை. மழை காலத்தின் அறிமுகத்தில் வயல் வேலைகள் முடிய வறுமை மறுபடியும் அவள் வீட்டில் குடி புகுந்தது. முக்கியமாக பள்ளி விடுமுறை நாட்களில் மதிய உணவு கிடைக்காதபோது வீட்டில் உணவு பிரச்சனை தலை தூக்கியது. வாரம் முழுவதும் சத்து உணவை சுவைத்துவிட்டு, இறுதி இரண்டு நாட்களில் ஒன்றும் கிடைக்காதது முருகனுக்கு ஏமாற்றத்தை தந்தது..  அந்த ஞாயிற்று கிழமை மதிய நேரமாகியும் குடிசைக்குள்ளே முருகன் இன்னமும் தூங்கி கொண்டிருந்தான்.  அஞ்சுகம் மதிய உணவிற்கு என்ன செய்வது என்பதை யோசித்து கொண்டிருந்தாள். மழை தூரலாக பெய்து கொண்டு இருந்தது. ரோடில் ஒரு வெளியூர் பஸ் நிற்க, அதிலிருந்து இறங்கிய ஒருவர் பஸ்ஸின் மேலிருந்து     இறக்கிய பெரிய மூட்டையை தன் வீட்டிற்கு கொண்டு செல்ல யாராவது கிடைப்பார்களா என்று பார்த்துக் கொண்டு இருந்தார். உடனே அஞ்சுகம் அங்கு சென்று “அய்யா! நான் தூக்கி வர்ரேனுங்க. எதாவது சாப்பாட்டுக்கு போட்டு கொடுங்க” என்று கெஞ்சினாள். “உன்னாலே முடியாதும்மா. மூட்டை ரொம்ப பளுவானது” என்றதும், “என்னாலே முடியுங்க” என்று சொல்லி மூட்டையை தன் முதுகில் வைத்து அவருடன் நடக்க ஆரம்பித்தாள். கிட்டதட்ட அரை மைல் தூரத்தில் இருந்த அவர் வீட்டில் இறக்கிவிட்டு, பக்கத்தில் இருந்த டீ கடையில் சாப்பாட்டை வாங்கி கொண்டு குடிசைக்கு விரைந்தாள். மூட்டையை தூக்கி வந்ததால் முதுகில் வலியுடன் வாசல் காத்திருந்த முருகனிடம் சாப்பாட்டு பொட்டலத்தை கொடுத்தாள். சாப்பிட்டு கொண்டே “அம்மா பள்ளிக்கூட சத்து உணவு மாதிரி இல்லையே. நல்ல சாப்பாடு வாங்கி வரக்கூடாதா” என்று அவன் அதிகாரமாக கேட்டதில்   அவள் நொந்து போனாள். மூட்டை தூக்கி முதுகு வலியில் சம்பாதித்த பணத்தில் வாங்கி வந்த சாப்பாட்டின் ருசி, அரசாங்க அன்பளிப்பாக பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கும் சத்து உணவின் ருசியின் தரத்தை விட குறைந்திருந்தாலும், தாயின் தியாகத்தால் அது கிடைத்தது என்பதை தன் மகன் புரிந்து கொள்ளவில்லையே என்ற மனவலியில் அஞ்சுகம் மிகவும் வருந்தினாள்.  எப்படியோ அந்த வார இறுதி நாட்களை கடத்தி விட்ட மன நிம்மதியில் பெரு மூச்சுவிட்டாள். ஆனால் மறு வார ஆரம்ப நாளன்று அப்படி ஒரு அதிர்ச்சி காத்திருக்குமென அவள் என்று எதிர்பார்க்கவே இல்லை.
. பள்ளியிலுருந்து திரும்பிய முருகன் காத்திருந்து, அஞ்சுகம் வந்தவுடன் தன் சிலேட்டை காண்பித்தான். அதில் அவளை மறு நாள் பள்ளிக்கு  வர சொல்லி எழுதியிருந்தது. மிகுந்த கலவரத்துடன் மறு நாள் காலையிலேயே முருகனுடன் பள்ளிக்கு  சென்றாள். தலைமை ஆசிரியர் அறையில் கைகட்டி நுழைந்த அஞ்சுகம் “அய்யா! கும்பிடுரேனுங்க. நான் முருகனோட அம்மா என்றாள். “உங்க பிள்ளை முருகன் சரியா படிக்காததாலே இந்த வருஷம் பாஸ் ஆகல்லே. அதனாலே நீங்க அவனை வேறு எங்காவது சேர்த்திடுங்க” என்று மிகவும் கண்டிப்பாக கூறினார். இதை கேட்ட அஞ்சுகத்திற்கு யாரோ சம்மட்டியால் தலையில் அடிப்பது போல் இருந்தது.. அவள் கவலை பட்டதெல்லாம் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பிவிட்டால் முருகனுக்கு மதிய சத்து உணவு கிடைக்காமல் போய்விடுமே என்ற பயம்தான். அவனுக்கு படிப்பு வேண்டும் என்று அவள் நினைத்ததே இல்லை. “அய்யா! மறுபடியும் அதே வகுப்பில் எத்தனை வருஷம் படிச்சாலும்,  எவ்வளவு வயசானாலும் பரவாயில்லை. தயவு செஞ்சு பள்ளிகூடத்தை விட்டு மாத்திரம் அனுப்பிடாதிங்க. நான் கூலி வேலை செஞ்சு பிழைக்கிறேங்க. ஒரு வேளை கஞ்சியே கஷ்ட்டப்பட்டு சாப்பிடறோம். இந்த மதிய சத்து உணவினாலே அவனுக்கு ஒரு வேளை சாப்பாடாவது கிடைக்குதுங்க. சனி ஞாயிறு கிழைமைகளில் கூட பள்ளிக்கூடம் இருந்தா அந்த நாட்களில் கூட அவனுக்கு அந்த சாப்பாடு கிடைக்குமில்லையா. அப்படி எதாவது ஏற்பாடு செய்ய முடியும்ங்களா? அவன் இப்படியே பள்ளி உணவை சாப்பிட்டு வளர்ந்து  வயசாச்சுன்னா,  எதாவது இரும்பு பட்டறையிலே வேலைக்கு அனுப்பிச்சிடுவேனுங்க” என்று கெஞ்சி முடிக்கும் போது அவள் கண்கள் குளமாயின. அவர்களிடம் பசியின் கொடுமையையும் வறுமையின் ஆக்ரமிப்பையும்  அப்பொழுது அவரால் உணர முடிந்தது. “நீங்க சொல்றதெல்லாம் புரியருது. ஆனால் பள்ளிகூட விதிப்படி நாங்கள் தேர்ச்சி பெறாத மாணவர்களை பள்ளியில் தொடர்ந்து வைத்து கொள்ள முடியாது” என்று வருதத்துடன் கூறினார்.  பள்ளியின்  நெறி முறைகளின்படி விடுமுறை நாட்களில் மதிய உணவு மாணவர்களுக்கு கொடுக்க முடியாது என்றும், இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிகூடம் கோடை விடுமுறைக்காக இரண்டு மாதம் மூடப்படும் என்றும் திட்ட வட்டமாக கூறினார். இதை கேட்ட அஞ்சுகம் நொருங்கி போனாள். இதனால் அவன் எதிர்காலத்தை பற்றி தான் தப்பு கணக்கு போட்டுவிட்டதை எண்ணி எண்ணி துவண்டு போனாள். முருகனின் எதிர் காலம் இருண்டு தெரிவதை அவள் மன கண்கள் பிரதிபலிக்க,  அவள் நெஞ்சு வலியுடன் குடிசையில் மயக்கமாகி கீழே விழுந்தாள். இதை பார்த்துக் கொண்டிருந்த முருகன் அழுது கொண்டே வேகமாக வெளியே வந்து  அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்து அவளை அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்த்தான். டாக்டர்கள் பரிசோதனைகளுக்கு பிறகு அஞ்சுகம் ரத்த அழுத்ததினால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு. உடலில் வலது பக்கம் செயல் இழந்து அதனால் மயக்கமாக நினைவு இழந்த நிலையில் இருப்பதாகவும் இன்னும்  இரண்டு நாட்கள் கழித்து தான் எதுவும் சொல்ல முடியும் என்று   கூறிவிட்டார்கள். இதையெல்லாம் அருகில் நின்று கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருந்த முருகனுக்கு  எதிர் காலம் ஒரு சவாலாக மனதில் தெரிந்தது. 

அஞ்சுகத்தின் பக்கத்து படுக்கையில் படுத்திருந்த ஒரு பெண்மணி கடும் காச நோயால் வாய் மூடாமல் இருமி கொண்டிருந்தாள். மற்ற நோயாளிகளுக்கு அது ஒரு தொந்தரவாக  இருந்தாலும்  முருகன் தன் தாய் வாய் திறந்து அப்படி ஒரு முறையாவது இரும மாட்டாளா என்று ஏங்கினான். அந்த பெண்மணியை பார்க்க ஒருவர் வந்து “வள்ளியம்மை! எப்படி இருக்கே” என்று கேட்டார். அவர் கேட்ட தொனியில் வள்ளியம்மை அவர் மனைவி என்பது தெரிந்தது.  அழுது கொண்டிருந்த முருகனை பார்த்தவுடன் “ஏன் தம்பி அழுவுறே! எதாவது சாப்பிட்டையா? கீழே கான்டீனுக்கு போய் நீ எதாவது  சாப்பிட்டு, எங்களுக்கு இரண்டு காப்பியும் வாங்கிட்டு வா” என்று பணத்தை கொடுத்தார். தனக்கு உதவியதும் அல்லாமல் தன்னை நம்பி ஒரு வேலையை ஒப்படைத்திற்கு நன்றி சொல்லி விட்டு, முருகன் விரைவாக கீழே சென்றான்.  பொறுப்பு உணர்ச்சிகளை மனதில் சுமந்து கொண்டு சென்ற  முருகனுக்கு, இந்த தொடக்கம் எதோ அவன் எதிர்காலத்திற்கு அடிக்கல் போல உணர்ந்தான். சிறிது நேரத்தில் திரும்பிய முருகனை “தம்பி! எதாவது சாப்பிட்டையா? உன்னோட இருக்க  இங்கே யாராவது இருக்காங்களா” என்று அந்த பெரியவர் கேட்டது மிகவும் அவனுக்கு ஆதராகவும் ஆறுதாலாகவும் இருந்தது.. “இல்லை அய்யா. என் அம்மாவை தவிர வேறு யாருமில்லை” அவன் குரலில் ஏக்கமும் பயமும் கலந்து இருப்பதை அவர் உணர்ந்தார். சிறிது யோசனைக்கு பிறகு “தம்பி என் பேரு வேலுபிள்ளை. உனக்கு சம்மதம்னா இன்னைக்கு எங்களோட எங்க ஊருக்கு வந்திடு. வள்ளியம்மைக்கு உதவியாய் இருக்கணும். உனக்கு தங்க வசதியும் மூணு வேளையும் சாப்பாடும் போடறேன். இங்கே உன் அம்மாவை ஆஸ்பத்திரியில் பத்திரமாக பார்த்துபாங்க. அம்மாவுக்கு மயக்கம் தெளிஞ்சவுடன் கூப்பிட்டு சொல்லுவாங்க. அப்போ நீ வந்து பார்கலாம்” என்றார் அந்த பெரியவர். “சம்பளம் எதாவது கொடுப்பீங்களா?” என்று தயக்கத்துடன் கேட்டான் முருகன்.. “கொடுக்கிறேன்” என்று அவர் சொன்னவுடன், “:அதை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சுடுங்க. அம்மாவுடய மருத்துவ செலவுக்கு எடுத்துபாங்க.” என்று அவன் சொன்னது அவர் மனதை மிகவும் நெகிழ வைத்தது. .”அதை பற்றி கவலைப்படாதே. உன் அம்மாவின் சிகச்சை செலவை நான் முழுவதும் பார்த்துக்கிறேன்” என்றவுடன் முருகன் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்து தன்  சம்மதத்தை உடனே சொன்னான். அன்று மாலை வள்ளியம்மையுடன் முருகனையும் கூப்பிட்டு கொண்டு பெரியவர் புறப்பட்டார். முருகன், கண்கள் நிறைய கண்ணீருடன் பிரிய முடியாமல் தன் தாயின் கால்களில் விழுந்து கும்பிட்டு,  அவர்களுடன் புறப்பிட்டான். முருகன் தன் எதிர்காலத்தை நிர்ணயக்கும் பயணத்தின் முதல் படியில் அடி எடித்து வைத்தான். வகுப்பில் படிக்காத பாடத்தை, காலம் முருகனுக்கு வாழ்க்கையில் பொருப்பு என்பதின் மூலம் கட்டாய பாடமாக்கியது. 
வாழ்க்கையின் முதல் கார் சவாரியை அனுபவத்த முருகனுக்கு  புதுமண்ணின் வாசம் பிகவும் பிடித்திருந்தது. வீட்டின் வாசலில் கார் நின்றவுடன், அந்த வீட்டை அண்ணாந்து பார்த்தான். மண் குடிசையிலுருந்து மாளிகை பிரவேசத்தில் முருகன் பரவசமானான். கார் நின்றதும் வீட்டிலிருந்து வந்த ஒரு பெண்மணி வள்ளியம்மையை கை தாங்கலாக உள்ளே கூட்டிச் சென்றாள். முருகன் தனக்கு கிடைத்த புது வாழ்வின் திருப்பு முனையை மிகவும் வரவேற்றான், அவனுக்கு கிடைத்த மூன்று வேளை சத்தான வாய்க்கு ருசியான உணவும், தனக்கு பிடிக்காத படிப்பை தொடரவேண்டிய நிர்பந்தம் இல்லா நிலையும், அவனுக்கென்று ஒரு தனி அறையும் அவனுக்கு கிடைத்த சலுகைகள். ஆனால் மறைமுகமாக அந்த புது வாழ்விற்கு காரணமான அவன் தாயின் உடல் நிலையை பற்றி யோசித்தான். ஒரு வேளை தன் தாய்க்கு உடல் தேறி அவள் வீட்டிற்கு அனுப்பபட்டு அவன் மறுபடியும் குடிசைக்கு போக நேரிட்டால்.......இந்த  எண்ணத்தில் அவன் சுயநலம் முன் வந்து  தன் தாய்க்கு இன்னும் கொஞ்ச காலம் உடல் நிலை குணமாக வேண்டாம் என்று கூட நினைத்தது.  ஆனால் அவன் மனச்சாட்சி, வள்ளியம்மைக்கு அவன் உதவி செய்யும் பொழுதெல்லாம் தன் தாய்க்கு சேவை செய்யும் உணர்வாகவே நினைத்தது.

வள்ளியம்மைக்கு மருத்துவ ஆணப்படி மருந்துகளும், உணவும் வேளை தவறாமல் முருகன் கொடுத்து வந்தான். ஆத்மார்த்தமாக அவன் செய்த உதவிகளினால் வள்ளியம்மைக்கு அவனிடம் நெருங்கிய பரிவு உண்டாகி தன் குடும்பத்தில் ஒரு உறவாக உணர்ந்தாள். மேலும் அவள் வழிபட்ட முருகன் கடவுள் அந்த முருகனின் வடிவில் அவளுடன் இருப்பதாகவும் நினைத்தாள். முருகனின் வருகைக்கு பிறகு வேலுபிள்ளைக்கு வள்ளியம்மையின் பொருப்பு மிகவும் குறைந்தது..  தன் இரும்பு பட்டறையில் அதிக கவனம் செலுத்தினார். மாலையில் வீடு திரும்பியதும், போன் மூலம் தெரிந்த அவன் தாயின் உடல் நிலை இன்னமும் அப்படியே இருப்பதை முருகனிடம் சொல்லுவார். அதை கேட்டு முருகன் சிறிது கலங்கினாலும், அவன் புது வாழ்க்கையை நினைத்து ஆறுதலடைந்தான்.

கால சக்கர ஒட்டத்தில் நாட்கள் வேகமாக நகர்ந்தன. அன்று காலை முருகன் ஒரு கரும் பூனனையின் உருவத்தில் கண் விழித்தான். இப்படி கண் விழிப்பது, எதோ ஒரு கெட்ட செய்தியின் வரவை கொண்டு வரும் என்று அவன் அம்மா சொல்ல கேட்டிருக்கிறான். அநேகமாக அவன் தாயின் மரண செய்தியை எந்த நேரத்திலும் மனசஞ்லத்துடன் எதிர்பார்த்தான். அது நடந்து விடுமோ என்று எண்ணி, வாசலில் இருந்த வேலுபிள்ளையிடம் அதை சொல்ல,  அவர் “தம்பி! அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது. மனசை போட்டு குழப்பிக்காதே” என்று கூறிவிட்டார். அவர் கொடுத்த பதிலில் அவன் மனம் தெளிவானதும்  வீட்டின் உள்ளே வந்த முருகனுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வள்ளியம்மை திடீரென்று தொடர்ந்து வாய்மூடாமல் வந்த இருமலின் முடிவில் ரத்த வாந்தி எடுத்தாள். இதை பார்த்த முருகன், வேலுபிள்ளையை கூப்பிட அவரும் உள்ளே ஒடி வந்து வள்ளியம்மையை தாங்கி பிடித்தார். அப்பொழுது வள்ளியம்மை பலவீன குரலில் பேசிய வார்த்தைகள் முருகனை சிலை ஆக்கியது. அவன் கைகளை பிடித்து  வேலுபிள்ளையை  பார்த்து தளதளத்த குரலில் “ஏங்க! என் கடைசி ஆசையை தீர்த்து வைப்பீங்களா?” என கேட்டாள்.. கண்கள் நிறைய கண்ணீருடன் வேலுபிள்ளை “அப்படியெல்லாம் பேசாதே. உனக்கு ஒண்ணும் ஆகாது” என்று தேற்றி “முருகா! டாக்டருக்கு போன் போட்டு உடனே வரச்சொல்” என்றார். “நான் பிழைக்கமாட்டேங்க. நமக்கு ஆண்டவன் குழந்தை பாக்கியம் கொடுக்கல்லை. அதனாலே முருகனை நம்ம பிள்ளையா  எடுத்துக்கோங்க” என சொல்லும்போது வேலுபிள்ளை அதை  மறுக்க முடியவில்லை. இதை சொல்லிவிட்டு வள்ளியம்மையின் உயிர் பிரிந்தது.  இந்த எதிர்பாரத அதிர்ஷ்ட்ட திருப்புமுனையில் முருகன் மகிழ்ச்சியின் சிகரத்தில் இருந்தாலும், இதனோடு இணைந்து வரும் துரதிஷ்ட்ட நிலையை பற்றி அவன் உணராமல் இல்லை. வேலுபிள்ளையின் வாரிசாக அவன் மாறிவிட்டால் அஞ்சுகத்தின் ஒரே சொத்தான அவனை, அவள் மயக்க நிலையில் அவளுக்கு தெரியாமல் எடுத்து கொள்வதை எப்படி நியாயபடுத்துவது. பிராயசியத்தமாக அம்மாவின் உடல் நிலை பூர்ண குணமானதும், அவளையும் தன்னோடு  வைத்து கொள்ளலாம் என்று சமாதானமானான். எல்லா இறுதி சடங்குகளும் நடந்து முடிந்த பின்னர் வேலுபிள்ளை முருகனை மகனாக எல்லோருக்கும் அறிமுகம் செய்து,  சட்ட ரீதியாகவும்  அதற்கு ஆவன செய்தார். அன்றிலிருந்து அவனும் அவருடன் பட்டறைக்கு சென்று பொருப்புகளை ஏற்றுகொண்டான்.
இந்த வசந்த விடியலை தொடர்ந்து முருகனுக்கு மற்றும் ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருந்தது. அஞ்சுகத்தின் மருத்துவ மனையிலிருந்து தொலைபேசி மூலம் அஞ்சுகத்தின் உடல்நிலையில் மாற்றமுள்ளதாகவும் அவளது கை கால்களில் சிறிது அசைவு இருப்பதாகவும் அது நல்ல முன்னேற்றம் என்றும், கண்கள் மாத்திரம்  இன்னமும் திறக்கவில்லை என்று வேலுபிள்ளையிடம் தெரிவித்தார்கள். அதை உடனே முருகனிடம் சொல்ல அவன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான். “அய்யா! நான் ஒரு தடவை ஊருக்கு போய் அம்மாவை பார்த்து விட்டு வருகிறேன். நீங்க என்னை மகனாக எடுத்துகிட்டதை அம்மாவிடம் சொல்லணும்”  என்று வேலுபிள்ளையிடம் கேட்ட பொழுது, அவருடய முகத்தில் வாட்டம் தெரிந்தது. முருகன் அவன் தாயை மயக்கம் தெளிந்து பார்க்கும் பொழுது அவன் இப்பொழுது அவள் மகன் இல்லை என்றும் அய்யாவின் தத்து புத்திரன் என்று தெரிந்தால், அவள் அந்த அதிர்ச்சியில் மறுபடியும் மயக்கமாகிவிட்டால்... இப்படி வேலுபிள்ளை நினைத்ததில் நியாயம் இருந்தது. அதுவும் அவள் சுயநினைவு இல்லாமல் இருந்த பொழுது தான் முருகனை மகனாக்கி கொண்டதை எண்ணி மிகவும் வருந்தினார்.. முடிவில் முழுமனதில்லாமல் அவன் ஊருக்கு போகும் வேண்டுகோளுக்கு தலை அசைத்தார்.   
மறு நாள் காலை புறப்பட தயாரான முருகனுக்கு, வீட்டு டெலிபோன் மணி அடிக்க அதை வேலுபிள்ளை எடுத்து பேசினார். அஞ்சுகம் அன்று காலை இறந்து போன செய்தியை அப்பொழுது டாக்டர் கூற, அதை கேட்டு வேலுபிள்ளை இடிந்து போனார். தழுதழுத்த குரலில் “முருகா! இன்னைக்கு காலையிலே உன்னோட அம்மா இறந்து போயிட்டாங்கன்னு ஊரிலே இருந்து  போன் பண்ணினாங்க. இந்த பணத்தை எடுத்து கிட்டு.  உடனே ஊருக்கு போ.” என்று முருகனிடம் பணம் கொடுக்கும்போது அவர் கண்கள் கலங்கின. இதை கேட்டு நிலைகுலைந்து நின்ற முருகனை, “இன்னும் ஏன் நிக்கிறே! சீக்கிரம் போப்பா” என்ற அவர் குரல் அவனை விரட்டியது. ஒரு வகையில் வேலுபிள்ளையின் இக்கட்டான  நிலையை அஞ்சுகத்தின் மறைவு முடித்து வைத்தது. 
“எங்கே சார் போகணும்” என்ற கண்டக்டரின் குரல் அவனை நிகழ்கால நினைவிற்கு கொண்டு வந்தது. “பூங்குளத்திற்கு ஒரு டிக்கெட்  கொடுங்க” என்று பணத்தை கொடுத்தான். சில மணி நேரம் கழித்து பஸ் வழியில் ஒரு ஊரில் நின்றது. மற்ற பிராயணிகளுடன் முருகனும் இறங்கி, அங்கிருந்த ஒரு ஹோட்டலில் காப்பி சாப்பிட்டு கொண்டிருந்தான். அப்பொழுது அங்கிருந்த  டி.வி.யில் பிரசித்தமான பாடலாசிரியர்  புலமைபித்தனின் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அதில் மரணத்தை பற்றியும் வாழ்க்கையை பற்றியும் அவர் விளக்கி கொண்டிருந்தார். “தாலாட்டுக்கும் ஒப்பாரிக்கும் இருக்கும் இடைவெளி காலம் தான் வாழ்க்கை என்பது. தாலாட்டு தூங்குவதற்கு பாடுவது. ஒப்பாரி நிரந்தரமாக தூங்கிய பிறகு பாடுவது. தூக்கம் மரணத்தின் ஒத்திகை. மரணம் ஒரு நிரந்தர நித்திரை”. இந்த விளக்கம் தாயின் இறுதிசடங்கிற்கு செல்லும் முருகன் மனதை மிகவும் தொட்டது. ஒரு. பெரிய தத்துவத்தை மூன்று வரிகளில் அவர் சொன்னது அவனை சிந்திக்க வைத்தது. மறுபடியும் பஸ் பயணம் தொடர, சில மணி நேரத்தில் பூங்குளம் கிராமம் வந்து, அவன் குடிசை வாசலில் பலர் கூடியிருப்பதையும் கண்டான்.  முருகன் வந்ததும் எல்லோரும் அவனிடம் இரங்கலை விசாரிக்க, குடிசையின் உள்ளே அஞ்சுகத்தின் உடலை பார்த்து கதறி அழுதான். அவன் வசதியான வாழ்க்கையின் ஆரம்பத்தை கேட்க அவன் தாய் இல்லையே என்று ஏங்கினான். அப்பொழுது அங்கிருந்த டீ கடை ஒன்றில் ஒலிபரப்பாகி கொண்டிருந்த அந்த பாட்டு, அஞ்சுகம் வாழ்ந்த வாழ்க்கையின் தொகுப்பையும், அவளுடைய இறுதி சடங்குகளை முருகன் சித்தரிப்பதை போலவும்  மிகவும் பொருத்தமாக அமைந்து. இருந்தது  ----
   .
 “குடிகார அப்பனுக்கு
அடிமாட வாக்கப்பட்டே    
கோபுரமா நான் உசர    
கொடுமையும் தாங்கிகிட்டே    
அஞ்சு வட்டி பத்து வட்டி    
அங்கி இங்கே கடன் பட்டே                                                                                                    
அத்தனையும் நான் படிக்க   
ஆயுசுக்கும் தாங்கி பிட்டே  
பட்ட துன்பம் போதும்ன்னா 
பாதியிலே உசிரை விட்டே, 
பட்டு தொட்டி கட்டுற உனக்கு
பச்சை மூங்கில் வெட்ட விட்டே
ஆரிரரோ  சொன்ன வாய்க்கு
அரிசு போட வைச்சுபிட்டே
பள்ளிகூடதுக்கு சுமந்த என்னை
குடம் உடைக்க வச்சுட்டே
பாலுட்டி என்னை வளர்த்த உனக்கு
பாலுத்த வந்திருக்கேன்"