Wednesday, January 15, 2014

பிரிவின் பிரதிபலிப்பு




பிரிவின் பிரதிபலிப்பு

பி.கிருஷ்ணமூர்த்தி

 ராமேஸ்வரம் எக்ஸ்பிரெஸ் சரியான நேரத்திற்கு ராமேஸ்வரத்தை வந்தடைந்தது..நானும்  என்   மனைவி அம்புஜமும் ரயில் நிலையத் திலிருந்து  கிளம்பி ஒரு   ஹோட்டலுக்கு வந்து, அங்கிருந்து சிறிது நேரத்தில் ராமநாதஸ்வாமி கோவிலுக்கு சென்று  புரோகிதரை பார்த்து மறுநாள்  எங்கள் ஒரே வாரிசான உத்ராவின் முதலாண்டு  இரங்கலை      சம்பிரதாயப்படி  சடங்குகள்செய்து கொடுக்க பேசினோம்.   புரோகிதரும் அதற்கு ஒப்பு கொண்டு, மறுநாள் மண்டபத்திற்கு       காலை    பத்து மணிக்கு வரச் சொன்னார். சொன்னபடி நாங்கள்    இருவரும் மறுநாள் மண்டபத்துக்கு வந்தடைந்தோம் அதே மண்டபத்தில் மற்றொருவரும் எதோ சடங்குகள் செய்ய அதே புரோகிதருக்கு காத்திருந்தார். “அவர் உங்களுக்கு முன் வந்திருப்பதால் அவரிடம் முடித்துவிட்டு, உங்களிடம் வருகிறேன். அதற்குள் நீங்கள் இருவரும் சமுத்திர ஸ்நானம் செய்து வாருங்கள்” என்றார்.. நானும் அம்புஜமும் கடலுக்கு சென்று குளிக்க ஆரம்பித்தோம். கடலின் அலைகள் போட்டிப் போட்டி கரையில் மோத, சில நிமிடங்களில் நினைவலைகளை என் மனதில் கொண்டு வந்து காட்சியாக அலசியது. 

அம்புஜத்தை கரம் பிடித்து பல வருடங்கள் கழித்து எங்களுக்கு உத்ரா பிறந்தாள். பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பாதுகாப்பதில் நான் மிகவும் அக்கரை கொண்டவன்.. செல்ல குழந்தையாக வளர்ந்த உத்ராவிற்கு கொஞ்சம் கண்டிப்பையும் சேர்த்து ஊட்டினேன். அவள் எங்கே காதல் போன்ற இன்றய முற்போக்கு முறைகளை  பின்பற்றி விடுவாளோ என்பதற்காக கல்லூரி நாட்களில் அவளை மிகவும் கண்காணித்தேன். கல்லூரி படிப்பு  எல்லாவற்றிலும்  அவள் முதலாவதாக வந்தாள். அதை சாட்சியாக வைத்து அவளது கவனம்  வேறு எந்த பருவகால  ஈர்ப்புக்கும் அடிமையாகவில்லை என்று கணக்கு போட்டேன். நான் பாரம்பரிய வழக்கத்திற்கு மாறாக எதையும் செய்யமாட்டேன் என்பதை  நன்றாகவே உத்ரா உணர்ந்திருந்தாள். கல்லூரி படிப்பு முடிந்தவுடனேயே அவளை கல்யாணத்திற்கு பெண் கேட்டு,  நல்ல வேலையில் உள்ள அழகான மாப்பிளைப்  பையனின்  சம்பந்தம் வீடு தேடி வர, குடும்பத்தில் நாங்கள்   கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்தோம். உத்ராவும் அந்த மாப்பிள்ளைக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் இருந்ததால், அவளுடய மெளனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டோம்.
        
நிச்சயதார்தம் நடந்து கல்யாண தேதியும் முடிவாயிற்று. திருமண தேதிக்கு மூன்று நாட்கள் முன்னதாக சொந்த பந்தங்கள் எல்லோரும்   வந்திறங்க, வீடே கலகலப்பாக இருந்தது. மறுநாள் காலை வெகு நேரமாகியும் உத்ரா அவள் அறையை விட்டு வெளியே வராததால், அம்புஜம் அவளை எழுப்ப சென்றபோது, “அய்யோ! இங்கே வாங்களேன். நாம மோசம் போய்ட்டோம்” என்று அம்புஜம் அலறி மயக்கத்தில் கீழே சாயந்தாள். எல்லோரும் சென்று பார்த்ததில் உத்ரா தூக்க மாத்திரைகளை  சாப்பிட்டு, வாயில் நுரை தள்ள இறந்து கிடந்தாள். அவள் அருகில் இருந்த கடிதத்தில், “தனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்லையென்றும், சகமாணவன் சத்தீஷை அவள் காதலிப்பதாகவும், காதல் கல்யாணத்தை அப்பா கண்டிப்பாக சம்மதிக்க மாட்டார் என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்தேன்” என்று எழுதியிருந்தது.
      
  ஈம சடங்குகளை முடித்த நான் மிகவும் நிலைகுலைந்து போயிருந்தேன். என் கண்டிப்பு வளர்ப்புக்கு நான் கொடுத்த விலை என் ஒரே மகள் உத்ராவின் உயிர். இந்த குற்ற உணர்ச்சி   என் உயிர் உள்ளவரை என்னை அன்றாடம் கொல்லும். இன்றய மாறுபட்ட உலகத்தில் இன்னமும் பாரம்பரிய பழக்க வழக்கங்களை பிடிவாதமாக பிடித்து கொண்டு, அவைகளை இன்றய இளைய தலைமுறைகளுக்கு கட்டாய படுத்தும் என்னை போன்ற சுயநலவாதிகளுக்கு நான் கொடுத்த விலை ஒரு பாடமாக இருக்கட்டும். உத்ராவை வெளி உலகம் தெரியாத செல்ல குழைந்தையாகவே  நினைத்து, அவளிடம் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கான மனபக்குவம்  இல்லை என்று நான் நினைத்துவிட்டேன். உறவுகளிடம் கல்யாண சம்பந்தத்தை பற்றி கலந்து ஆலோசித்த நான், முக்கியமாக உத்ராவின் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டேன். காலத்தின் கட்டாயத்தில் எல்லாமே மாறியிருக்கும் போது, பழய பண்பாட்டு முறைகளிலும் நாம் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  
      
  உத்ராவின் மறைவுக்கு பிறகு அம்புஜம் ஒரு நடை பிணமாகவே இருந்தாள். எதிலும் ஈடுபாடு இல்லாமல், யாரிடமும் பேசாமல் எப்பொழுதும் தனிமையை நாடினாள். உத்ராவின் முடிவுக்கு காரணம் நான் என்று என்னை குற்றம் சாட்டினாள். அந்த சமயங்களில் நான் குற்ற உணர்ச்சியில் குறுகி போனேன். காலசக்கரத்தின் வேகத்தில் எது  மறந்தாலும், பெற்றவள் மனதில் புத்திர சோகம் மட்டும் நிரந்தரமாக தங்கிவிடும்.    
       
உத்ராவின் அறையை சரி செய்யும்பொழுது, ஒரு புத்தகத்தின் நடுவில் சத்தீஷின் படம் இருந்ததை பார்த்தேன். சத்தீஷ் மிகவும் அழகாகவும் வசதியானவனுமாக இருந்தான். உத்ராவின் செல் போனில்  அவனும் உத்ராவும் கடைசியாக பேசியது பதிவு ஆகியிருந்தது. உத்ரா, தன் திருமணத்தை நிறுத்தவோ அல்லது அதற்குமுன் சத்தீஷுடன் வீட்டிற்கு தெரியாமல் ஒடிப்போவதையோ அவனிடம் கேட்டபோது, திருமணத்தை அவன் நிச்சயமாக நிறுத்தமுடியாது என்பதையும், அதற்கு பதில், கட்டாயம் இரண்டு நாட்களுக்கு முன்னதாக இருவரும் வீட்டிற்கு தெரியாமல் எங்காவது ஒடிப்போக அவன் வேண்டிய ஏற்பாடுகள் செய்வதாயும் கூறியிருந்தது பதிவாகி இருந்தது. உத்ரா அவனை முழுவதும் நம்பி இருப்பதாகவும் இரவு பத்து மணிக்குமேல் எல்லோரும் தூங்க சென்றபின் தன் அறையில் காத்திருப்பதாகவும், சத்தீஷை வாசலில் வந்து  செல்லில் அவளை கூப்பிட்டவுடன் தான் வெளியே வந்து அவனுடன் சேருவதாகவும் உத்ரா சொன்னது பதிவு ஆகியிருந்தது. நடு இரவு ஆனபிறகும் சத்தீஷ் வராததால், பலமுறை அவனை செல்லில் உத்ரா கூப்பிட்டதும்  பதிவாகியிருந்தது. வெகு நேரம் காத்திருந்து அவன் வராமலும், எந்தவித பதிலும் அவனிடமிருந்து இல்லாததால், வேறு  வழி தெரியாமல் பிறகுதான் உத்ரா தூக்க மாத்திரைகளின் உதவியை நாடி இருக்க  வேண்டும். 
        
சத்தீஷின் திட்டபடி உத்திராவை கூட்டி செல்ல ஏன் அவன் வரவில்லை என்ற கேள்விக்கு பதில் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை.  அவன் வீட்டு விலாசமும் எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. உத்ரா இறந்த செய்தி எப்படியும் அவனுக்கு தெரிந்து இருக்கும். சத்தீஷ் வசதி உள்ள குடும்பத்தை சேர்ந்தவனாக இருந்ததால் அவன் பொழுது போக்கிற்காக உத்ராவை காதலிப்பது போல் நடித்து, அது அவளோடு ஒடிப்போகும் நிலைக்கு கொண்டுவிடும் என்று அவன் எதிர் பார்த்திருக்கமாட்டான். இந்த நெருக்கடி நிலையில்  இருந்து தப்பிக்க அன்றிரவு வராமல் ஏமாற்றியிருப்பான். ஆனால் உத்ராவோ அவனை சிறிதும் சந்தேகிக்காமல், அவன் வரும் வழியில்  சாலை விபத்தில் அவனுக்கு எதாவது நடந்து இருக்கவேண்டும் என்று எண்ணினாள். மனதிலே சத்தீஷை நினைத்து கொண்டு, மற்றொருவனுக்கு மனைவியாக மறுநாள் அவள் மணமேடை ஏற விரும்பி இருக்கமாட்டாள். அதன் விளைவுதான் தன் உயிரை முடித்து கொண்டாள்.  இதற்கு மேல் அவள் உயிர் விட்டதற்கு என்னால் எந்தவித காரணத்தையும் நினைத்து பார்க்க முடியவில்லை. 
      நிச்சயதார்தத்திற்கு முன் உத்திராவிடம் மாப்பிள்ளை போட்டோவை கொடுத்து உனக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டதற்கு என் கையில் இருந்த  படத்தை அவள் கையில்கூட வாங்காமல், குனந்து கொண்டே மெளனமாக கல்லூரிக்கு    சென்றுவிட்டாள். அவள் மெளனத்தில் அவள் சொல்ல வந்தது, நான்  பார்த்திருக்கிற மாப்பிள்ளை எல்லோருக்கும் பிடித்திருந்தாலும்  அல்லது மாப்பிள்ளைக்கும்  பெண்ணை மிகவும் பிடித்து ,சீர் சீதனமும் எதுவும் கேட்காததால் அவனையே  நிச்சயமாக்க போகிறோம் என்று முடிவெடுத்தாலும், அதற்கான உத்ராவின் உணர்வுகளின் வெளிப்பாடு மறுபடியும் மெளனம்தான். அதன் உள்நோக்கத்தை  புரிந்திருக்கவேண்டும். பழைய தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையே உரிமைகளின்  வேற்றுமைகளை   அவரஅவர்  நிலையில் நியாப்படுத்த படுகின்றன. நான் வளர்ந்த வாழ்க்கை சூழலும் உத்ரா வளர்ந்த வாழ்க்கை சூழலும் வித்தியாசமாக இருந்ததால்  அது எங்களின்  பாசத்தில் விரிசலை  ஏற்படுத்தியுள்ளது. 
    
இளைய தலைமுறை தான் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது என் முடிவு. . பாரம்பரியம் பண்பாடு இவைகளின் அடிப்படையில் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு என்றுமே இடமில்லை என்ற எழுதப்படாத சட்டத்துடன் குடும்பத்தில் நான் சர்வாதிகாரயாக இருந்தேன். அதன் விளைவுதான் எல்லா கேள்விகளுக்கும் உத்ராவின் மெளன மொழியில் பதில்.. பொருளாதார நிலை, அழகு, குடும்ப பின்னணி, ஜாதி, ஜாதகம்  இவைகளின் அடிப்படையில் பெண்ணிற்கு துணையை தேடிய பெற்றோர்களில் நானும் ஒருவன். உத்ராவிற்கும் இவைகளை பார்த்துதான் மாப்பிள்ளையை தேர்ந்து எடுத்தேன். உத்ராவின் மெளனத்தில் அவளுடய எதிர்ப்பை நான் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், என் பழைய நம்பிக்கைகளில் இருந்து என்னால் மாறுபட முடியவில்லை.  என்னிடமுள்ள அளவு கடந்த பாசத்தாலும் மரியாதையாலும் தன் காதலை என்னிடம் வெளிப்படுத்த முடியாமல் உத்ராவின் மனதில் பெரிய போராட்டமே நடந்திருக்கும். ஆனால் அதை .அவளிடம் நேராகவே கேட்டால், அதை நான் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக அதை பயன்படுத்தி,  ஆம் என்று பதிலளித்து விடுவாள். அது என்னை சம்மதிக்கும் நிர்பந்த நிலைக்கு தள்ளவிடும் என்று நேராக கேட்க தயங்கினேன். நான் இதுவரை பாதுகாத்த பண்பாட்டு நம்பிக்கைக்கும் என் ஆண்வர்க ஆணவத்திற்கும் அது ஒரு சவாலாகிவிடுமே! சுங்க சொன்னால் நான் ஒரு சூழ்நிலை கைதியானேன். இப்படி உத்ராவின் மரணத்தை பற்றி மனதிலே ஒரு பட்டி மன்றமே நடத்திக் கொண்டிருந்தபோது புரோகிதரின் கூப்பிடும் குரல் கேட்டு திரும்பினேன். கை சைகளின் மூலம் எங்களை அழைப்பதை புரிந்து கொண்டு மண்டபத்திற்கு விரைந்தோம்.
       
அங்கே எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்து எங்களுக்காக புரோகிதர் காத்திருந்தார். நாங்கள் வந்தது
 உத்ராவின் முழுப்பெயர்,  நட்சத்திரம், இறந்துபோன அன்று என்ன திதி போன்ற விவரங்களை எங்களிடம் கேட்டு சிரார்த சடங்குகளை ஆரம்பித்து ஒரு மணி நேரத்திற்குள் முடித்து வைத்தார். முடிவில்.  “உங்களுக்கு முன்னால் ஒருவருக்கு இதே மாதிரி சடங்குகளை அவருடைய மனைவிக்கு இங்கு செய்து வைத்தேனே, அந்த மனைவியின் விவரங்களும் உங்கள் பெண்ணின் விவரங்களும் ஒன்றாக இருந்தன. ஆனால் நீங்கள்  சொன்ன முழுப்பெயர் உத்ரா சந்தானம் ஆனால் அவர் சொன்ன முழுப்பெயர் உத்ரா சத்தீஷ்” இந்த வித்தியாசத்தை தவிர மற்ற விவரங்களும் ஒன்றாயிருக்கின்றன” என்றார். சத்தீஷ்  இந்த பெயர் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகும். உத்ராவின் கடைசி வரிகளில் எழுதியிருந்த பெயர் அல்லவா அது. அவர் மனைவிக்கு சடங்குகள் செய்ததாக புரோகிதர் சொன்னது என்னை மிகவும் குழப்பியது.  “அவருடைய. திருமணம் எப்பொழுது எங்கே நடந்தது” என்று நான் கேட்பதற்கு முன்  ”திருமணம் ஆகாமல் அவருடைய காதலி  உத்ரா மரணமடைந்ததாலும் சத்தீஷ் உத்ராவை மானசீக மனைவியாக ஏற்றுகொண்டு, அவளுடைய பிரிவு தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு வருட காலமாக இந்த கோவில் மடத்தில் தங்கி சந்நியாசிபோல் இருக்கிறார்.” என்ற புரோகிதரின் விளக்கம் என்னை மிகவும் நெகிழவைத்தது.   இதை கேட்டதும் அம்புஜம் என்னை பார்க்க நானும்  அவளுக்கு எந்த விளக்கமும் கொடுக்க முடியாமல் திகைத்து நின்றேன். இன்றய நாகரீக சமுதாயத்தில் கணவன்-மனைவி தெய்வீக உறவு சீர் குலைந்த நிலையில் இருக்க, தன் காதலி உத்ராவின் அகால மரணத்தில் மனமுடைந்து அவளை மானசீக மனைவியாக சத்தீஷ் ஏற்று கொண்டிருக்கிறான். அவளுக்காக, தன் எதிர்கால வாழ்வுபற்றி சிறிதும் சிந்திக்காமல் இளம் வயதிலேயே  தனிமை  வாழ்வையும்  நாடியிருக்கிறான். அப்படிபட்ட சத்தீஷை பற்றி, நான் எவ்வளவு கீழ்தரமாக முன்பு விமர்சனம் செய்திருக்கிறேன் என்று எண்ணி வெட்கி தலை குனிந்தேன்.
        
அன்றிரவு சத்தீஷ் உத்ராவை கூட்டி செல்ல வராததிற்கு காரணம் பற்றி  அவனிடம் தெரிந்து கொள்ள மிகவும்   ஆவலாக இருந்தேன். அப்படி அவர்கள் திட்டப்படி ஒடிப் போயிருந்தால்   நானும் அதை விதியின் விளையாட்டு என்று மனதில் ஆறுதல் அடைந்திருப்பேன்.  என் ஆண் வர்கத்தின் ஆணவத்திற்கு கிடைத்த ஒரு சவுக்ககடியாக கூட எண்ணியிருப்பேன். அப்படி நடந்திருந்தால்,  என் செல்ல பெண் என்னிடமிருந்து சில காலம் விலகி இருந்தாலும்   காலச்சக்கர ஒட்டத்தில் நானும் அவள் செய்ததை மறந்து மன்னித்து திரும்ப ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால் அவளை என் ஆணவத்தால் சடலமாக்கிய கொடுமைக்கு என்ன பிராயசித்தம் நான் செய்ய முடியும்? 
                       
சடங்குகள் முடித்த நிலையில், அங்கு நடந்த நிகழ்வுகளில் நாங்கள்  மகழ்ச்சியால் திளைத்தோம்..  நானும் என் மனைவியும் சத்தீஷை எங்கள் குடும்ப வாரிசாக கூட்டி செல்ல முடிவு செய்தோம். அம்புஜமும் நானும் புரோகிதரிடம் கேட்டுக் கொண்டபடி, அவர் சத்தீஷை சந்திக்க எங்களை மடத்திற்கு கூட்டிச் சென்றார். அங்கு சத்தீஷ் இல்லததால் புரோகிதர் அங்கிருந்தவரிடம் சத்தீஷை பற்றி விசாரிக்க, அவர் கூறிய விவரங்களை    கேட்டு என் நெஞ்மே வெடித்திடும் போல இருந்தது. அதை கேட்ட அம்புஜமும் மயக்கமாக கீழே சாய்ந்தாள்....

       
சடங்குகளை செய்து விட்டு மறுபடியும் கடலுக்கு  குளிக்க போன சத்தீஷ்,, அங்கே பெரிய அலைகளில் சிக்கி, மீளமுடியாமல், முடிவில் கடலில் மூழ்கி,  சடலமாக  கரை சேர்ந்தான்.  ஆனால் சத்தீஷின் எதிர்பாராத  இந்த மரணம்  எங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது மரணத்தின் மூலம் சத்தீஷ் அவன் மானசீக மனைவி உத்ராவுடன் சேர்ந்தது, ஒருவன் தன் கண்களை விற்று தனக்கு பிடித்த ஒவியத்தை வாங்கிய கதை போலானது. .