Saturday, November 12, 2011

VANAPRASTHAM


வானபிரஸ்தம்
   
பி..கிருஷ்ணமூர்த்தி

ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் கடற்கரையை ஒட்டி பறந்த வெளியில் நடுவே அமைந்திருந்த வானபிரஸ்தம் என்ற முதியோர் இல்லத்தை பற்றி தெரியாதவர்கள் யாரும்  அந்த வட்டாரத்தில் இருக்கமுடியாது. அதில் வசித்து வரும் அறுபதிலிருந்து எண்பதை எட்டிவிட்ட முதியவர்கள் தனியாகவும் தம்பதிகளாகவும், தங்கள் சொந்த பந்தங்களால், அதுவும் அவர்களின் வாரிசுகளால் ஒதுக்கப்பட்டு மிஞ்சிய நாட்களில் மன அமைதியை தேடி அங்கே ஒதிங்கியவர்கள். இன்னும் இரண்டு மாதங்களில் அறுபதை முடிக்கப் போகிற சதாசிவமும் வானப்பிரஸ்தத்தில் ஒரு வாசி. ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து இரண்டு வருடத்திற்கு முன்னால் ஒய்வு பெற்றவர். அவருடைய ஒரே வாரிசான வாசு,அதே ஊரில் ஒரு பெரிய தனியார் கம்பெனியில் உயர்ந்த நிலையில் மனைவி சுமதி, வாரிசுகள் குமார், ஸ்வேதாவுடன் சொந்த வீட்டில் வசதியாக வாழ்ந்து வந்தான்.
       ஐந்து வருடத்திற்கு முன்னால் மனைவி பார்வதியை மரணத்திற்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு, பிறகு தனி மரமான சதாசிவத்திற்கு, எதிர்காலம் ஒரு கேள்வி குறியாகவே தெரிந்தது. பார்வதியின் மறைவில் தான் அநாதையாகி போனதை அவர் உணர்ந்தார்.  முடியாத நிலையிலும் அவருக்கு வேண்டியதை அவரே செய்ய வேண்டியை நிர்பந்தம் ஏற்பட்டது.  காலம் ஒன்றுதான் மரணத்தை மறக்க செய்யும் மருந்து. ஆனால் மனைவியின் மரணம் சதாசிவத்தை மட்டும்  நிழலாக தொடர்ந்தது.. பூவும் பொட்டுமாக தனக்கு முன் போய் சேர்ந்து அவரை  தனிமையில் தவிக்க விட்டதே அவரது ஆதங்கம். அந்த சோர்வில் ஒரு நாள் அவர் உடல் நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது.  . அதற்காக வீட்டில் ஒரு குருக்ஷேத்திரமே நடந்து, அதில் வாசுவும் சுமதியும் ஒற்றுமையாக எடுத்த முடிவு, சதாசிவத்தை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவது என்று.  வாசு அடிக்கடி வெளியுர் செல்வதாலும், சுமதி மாதர் சங்க வேலைகளில் ஈடுபட வேண்டி இருப்பதாலும், அவருடய அன்றாட தேவைகளை கவனிக்கவும், மருத்துவ கண்காணிப்பும் எந்நேரமும் கிடைக்குமிடம் முதியோர் இல்லம் தான். இவைகளை சொல்லி அவரை ஒத்துக் கொள்ள வைத்தனர். சதாசிவதிற்கு பேர பிஞ்சுகளை விட்டு செல்ல மனமில்லாமல் இருந்தாலும், நிர்பந்த சூழ்நிலையில் வானப்பிரஸ்த்தில் அடி எடுத்து வைத்தார்.
இன்றய வாழ்க்கை சூழ்நிலையில் மனித குலம், முடிவுரை காலத்தில் மற்ற உலக பந்தங்கள் எல்லாவற்றையும் பெருதன்மையோடு உதறி விட்டு, தன் வாழ்க்கை அத்தியாயம் எந்நேரமும் முடிய போகும் என்பதை   தயராக்கும் மன நிலை தான் வானப்பிரஸ்தம்.  வரலாற்றின்படி கிருஷ்ண பகவானே அவரது அந்தி நாட்களில், காட்டிற்குள் சென்று ஒரு மரத்தடியில் தனது முடிவை வரவேற்று காத்திருந்து தூங்கும் பொழுது, ஜாரா என்ற வேடனுடய அம்பின் மூலம் அவருக்கு முடிவு ஏற்பட்டதாம்.
முதியோர் இல்லத்து வாழ்க்கையின் முன்னுரையில் சதாசிவம் சந்தித்த பல சக வாசிகளின் கதைகளில் ஒன்றுக்கொன்று மாறு பட்டதாக இருந்தாலும், எல்லா கதைகளுக்கு பின்னணியின் முக்கிய ராகம் முகாரி.  சுய நல நாகரீக வாழ்க்கையில் சிக்கி தவிப்பதால்,  இன்றய இளைய தலை முறை, பரிவையும் பாசத்தையும் கொட்டி வளர்த்த உறவை உதாசீன படுத்திகிறது.  அதுவும் ஒரு பெரியவரின் கதை, சோகத்தின் சிகரமாய் சதாசிவத்தின் மனதை நெகிழ வைத்தது.   சுருங்கி போன முகத்தில் எத்தனை சுருக்கங்கள்!. அவர் கூன் விழுந்த உடம்பும்,  பொக்கை வாய் சிரிப்பும்மங்கிய பார்வை கொண்ட அவரது கண்களும், அவர்  வாழ்க்கை அனுபவத்தின் அடையாளங்கள். நான்கு வாரிசுகளை பெற்றிருந்தும் அநாதையாக அவரை தனிமையில் தள்ளப்பட்ட கொடுமை!  மஹாபாரத்தில் கர்ணன் வரலாற்றை அவருக்கு சதாசிவம் படித்து காட்டும்போது, குறிப்பாக குருஷேத்திர போர்க்களத்தில், முடிவில் கிருஷ்ணர் கர்ணனுக்கு காட்சியளித்து,அவனுக்கு வேண்டிய வரத்தை கேட்டார். கர்ணன் முதலாவதாக கேட்டது, தான் வெகு விரைவில் இறக்க வேண்டும் என்பது.. இதை கேட்ட பெரியவரின் கண்களிருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டும். எண்பதை தாண்டிவிட்ட முதுமையில் அந்த பெரியவரும் கர்ணனை போல,  சாவிற்காக தினமும் பிரார்த்தனை செய்தார். .
மிகவும் குறுகிய காலத்திலேயே தன் புது வாழ்க்கையில் ஒன்றி கொண்ட சதாசிவத்திற்கு,  பேர குழந்தைகளை பார்க்காமல் இருப்பது மட்டும்  பெரிய குறையாக இருந்தது. நிமிடங்கள் ஓடி வருடங்களாக மாற, இரண்டு வருடத்தை அந்த இல்லத்தில் வாழ்ந்து முடித்த சதாசிவம், திடீரென்று ஒரு இரவு தூக்கத்திலேயே மரணத்தை தழுவினார். வானப்பிரஸ்தமே சதாசிவத்தின் மறைவில் அழுதது. பெரியவரும் மஹாபாரத்தை எனக்கு படித்து காட்ட இனிமேல் சதாசிவம் இல்லையே என்று கண்ணீர் விட்டார்.
சதாசிவத்தின் உடல் வானப்பிரஸ்த்தின் முன் ஹாலில் வைக்கப்பட்டு அவருடய ஒரே வாரிசு வாசுவிற்கு டெலிபோனில் சொல்லப்பட்டது. இறுதி சடங்குகளுக்கு ஏற்பாடும் செய்யப்பட்டது. செய்தி கேட்ட வாசு, மனைவி சுமதியிடம் அதை விவரிக்க, தனக்கு மாதர் சங்கத்தில் மந்திரியின் தலைமையில்  பட்டிமன்றம் ஒன்று அன்று இருப்பதாகவும், அதனால், தான் வானப்பிரஸ்த்திற்கு வர முடியாது என்று கூறினாள். மேலும் “நீங்கள் அவருக்கு இறுதி காரியங்கள் இன்று செய்தால், தொடர்ந்து பத்து நாட்கள் செய்ய வேண்டி வரும். நாம் இன்னும் இரண்டு நாட்களில் கம்பெனி   விஷயமாக அமெரிக்கா போவது தடைபடும்”  என்றும் எச்சரித்தாள்.
சிறிது நேரத்தில் முதியோர் இல்லதில் காரில் வந்து இறங்கிய வாசு, நேராக அப்பாவின் உடலருகே சென்றவுடன் கண் கலங்கினான்.  “நீங்கள் தான் அவருக்கு இறுதி சடங்குகளை செய்ய வேண்டும்” என்றார் கூட இருந்த புரோகிதர். “இன்னும் இரண்டு நாட்களில் நான் அமெரிக்கா செல்ல வேண்டி இருப்பதால் இறுதி சடங்குகளை நான் செய்ய முடியாது. வேறு யாராவது செய்யட்டும். நான் செய்ய முடியாத நிலையில், இறுதி சடங்குகளின் செலவை அவர் வைத்திருந்த சேமிப்பில் எடுத்து கொள்ளவும். அப்படி அவர் சேமிப்பில் போதிய பணம் இல்லை என்றால்,. அவரை இங்கு சேர்க்கும் பொழுது, உங்கள் கான்ட்ராக்டின்படி இறந்த நபரின் உறவினர்கள் யாரும் வராத பட்சத்தில் அவரை அநாதையாக கருதி, முதியோர் இல்லமே இறுதி சடங்குகளின் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்றான் வாசு.  வசதியாக வாழும் ஒரே வாரிசு தன் தகப்பன் மரணத்தில் இப்படியா கணக்கு பார்ப்பது?” என்று எல்லோரும் திகைத்து போயினர் “நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் அநாதையாக இறந்தவர்களுக்கு மட்டும் அது பொருந்தும். வசதியாக வாரிசு நீங்கள் இருக்கும்போது சதாசிவம் அநாதையாக மரணம் அடையவில்லையே, நாங்கள் ஏன் அந்த செலவை செய்ய வேண்டும்?” என்றார் இல்லத்து நிர்வாகி.  “நான் வராமலே இருந்திருந்தால், அவர் அநாதைதானே. அதை தானே நீங்கள் செய்திருப்பீர்கள்” என்று வாதாடினான் வாசு.
அப்பொழுது யாரோ வசீகர முகத்துடன் வெளி நாட்டு பாணியில் உடை அணிந்து நடுத்தர வயதில் ஒருவர் காரில் வந்திறங்கி சதாசிவத்தை பார்க்க வேண்டும் என்றார். “நீங்கள் யார்?” என்று நிர்வாகி கேட்க, “என் பெயர் ரவி. நான் அமெரிக்காவிலிருந்து வருகிறேன். சதாசிவம் தலைமை ஆசிரியராக பணி புரிந்த அதே பள்ளியில் அவரிடம் படித்த பழைய மாணவன். என் சிறு வயதிலேயே என் பெற்றோர் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டனர். நான் படித்து முன்னேறி  வசதியாக அமெரிக்காவில் வாழ்வதற்கு  சதாசிவம் தான் முக்கிய காரணம். நான் படித்த பள்ளிக்கு சென்றிருந்தேன்.  அவர் இங்கு இருப்பதாக சொன்னார்கள்.” என்றான் ரவி.
நிர்வாகி வாசுவை ரவிக்கு அறிமுகம் செய்து விட்டு  ரவியிடம் “சதாசிவம் நேற்று இரவு  மாரடைப்பினால் இறந்து போனார்” என்றார்.  இதை கேட்டதும் ரவி நம்ப முடியாமல் சிலையாக நின்றான்.  அவர் உடலை பார்த்ததும் சிறு குழந்தை போல வாய் விட்டு அழுதான். பல வருடங்கள் கழித்து அவரை சந்திக்க வந்த ரவி, அவரை உயிரற்ற சடலமாக பார்த்ததில் இடிந்து போனான். சிறு வயதில் தான் அநாதையாக நின்ற போது, அவர் செய்த உதவிகள் அவன் நினைவலைகளில் காட்சிகளாக தெரிந்தன. தான் இருக்கும் போது அவர் எப்படி அநாதையாக முடியும்? என்று நினைத்தான். உறவுமில்லாமல் என்றோ அவரிடம் படித்த மாணவன் என்ற பந்ததில், மனம் விட்டு அழுத ரவியின் உணர்வுகள் எங்கே; பரிவையும் பாசத்தையும் கொட்டி வளர்த்த தகப்பனுக்கே இறுதி சடங்குகளை செய்ய கணக்கு பார்க்கும் ரத்த சம்பந்த உறவான வாசுவின் பேச்சும் நடவடிக்கையும் எங்கே, என்று இருவரின் மாறுபட்ட உணர்வுகளை அங்கிருந்தவர்கள் ஒப்பிட்டு பார்த்தனர். .  
நிர்வாகி மெதுவாக ரவியிடம் “இன்னும் இரண்டு  நாட்களில் வெளி நாடு போக வேண்டி இருப்பதால் வாசுவினால் இறுதி சடங்குகளை செய்ய முடியாதாம். உங்களால் சடங்குகளை செய்ய முடியுமா? இறுதி சடங்கின் மொத்த செலவையும் நாங்கள் செய்கிறோம்”. .என்று கேட்டார். ஒரு முறை வாசுவை வெறுப்புடன் பார்த்துவிட்டு “என் குருவிற்கு அதையாவது செய்ய ஆண்டவன் ஒரு வாய்ப்பு கொடுத்தானே!” என்று ரவி நன்றி சொல்லி, செலவை மொத்ததையும் தானே செய்வதாகவும் ஒப்பு கொண்டான். வாசுவிற்கு ஒரு பெரிய தர்ம சங்கடத்திலிருந்து விடுபட்ட உணர்வு.. சந்தர்ப்ப சூழ்நிலையில் நன்றி கடன் செலுத்த பழைய பந்ததில் வந்த ரவியின்  சம்மதத்திலாவது அவர் ஆத்மா சாந்தி அடையும் என்று நம்பினர்.
தகப்பனுக்கு இறுதி சடங்குகளை செய்வது மகனின் கடமை; ஏன் அவன் உரிமை என்றும் சொல்லலாம். அந்த மகன் இருக்கும் பொழுது, அவன் சம்மதத்தில் விட்டு கொடுத்து வேறு அந்நியன் ஒருவன் இறுதி சடங்குகளை செய்தால்,மகன் தன் முக்கிய கடமையில் தவறியது அவனுடைய ஜீவாதார உரிமையும் விட்டு கொடுப்பது போலாகும். சில குடும்பங்களில் இறந்தவரின் சொத்து பிரச்சனையில், இறுதி சடங்குகளை செய்தவருக்கே சாதகமாக தீர்ப்பு இருந்திருக்கிறது என்றனர் சிலர் .       
இதற்குள் அறையிலிருந்து எடுத்து வந்த அவர் உயிலில், அவர் வங்கி சேமிப்பில் இருக்கும் பணத்தை சரி பாதியாக பிரித்து, ஒரு பாதியை அவருடைய இறுதி கடன்களை செய்யும் வாசுவிற்கும், மறு பாதியை வானப்பிரஸ்த்திற்கும் நன்கொடையாக கொடுக்கவும்; சூழ் நிலை காரணமாக வாசுவினால் இறுதி சடங்குகளை செய்ய முடியாவிடில், அந்த பங்கை யார் இறுதி சடங்குகளை செய்கிறார்களோ அவருக்கு கொடுக்கவும் என்றிருந்தது. . அந்த உயிலோடு இருந்த வங்கியின் பாஸ் புத்தகத்தின்படி, சேமிப்பில் ஐந்து லட்ச ரூபாய் இருப்பதும் தெரிந்தது. முழு உயிலையும் வாசு, ரவி மற்ற எல்லோரும் கேட்கும்படி நிர்வாகி படித்தார். தன் சிறிய பங்கை பற்றி விட்டு கொடுத்த வாசு தன் வெளி நாட்டு பயணத்தை பெரிதாக கருதினான். எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அப்பா மகனுக்கு விட்டு செல்லும் கடைசி அன்பளிப்பை நிராகரிப்பதோ அல்லது   விட்டு கொடுப்பதோ, இறந்த மனிதருக்கு மகன் செய்யும் அவமரியாதை என்றனர்.! ரவி சடங்குகளை செய்ய ஒப்பு கொண்டு விட்டதால் வாசு வீட்டிற்கு திரும்பினான். ரவியோ பெருதன்மையுடன் நிர்வாகியிடம் அவன் பங்கையும் வானப்பிரஸ்த்திற்கே நன் கொடையாக கொடுத்து விட்டான்.
ரவி கண்களில் கண்ணீர் மல்க எல்லா சடங்குகளையும் செய்து, முடிவில் அவருடைய சிதைக்கு தீ வைத்தவுடன், துக்கம் தொண்டையை அடைக்க மயங்கி கீழே விழுந்தான். சொந்த மகன் செய்ய வேண்டிய கடமையை, நன்றி கடன் செலுத்த வந்த அந்நியன் யாரோ செய்ததை எந்த விதத்தில் எடுத்து  கொள்வது?. பிரிந்த ஆன்மாவிற்கு இதனால் சாந்தி அடையுமா என்பது விவாத்துக்குரியது. ஆனால் சதாசிவம் இதை எதிர்பார்த்து தான் உயிலில் அப்படி எழுதி வைத்தாரோ!
வீட்டிற்கு வந்த வாசுவிற்கு மனசாட்சி திரும்ப திரும்ப அவன் கடமையில் தவறியதை சுட்டி காட்டியது. மன்னிக்க முடியாத மிகப் பெரிய குற்றத்தை செய்த உணர்வு அவனை வாட்டியது. எதோ அமெரிக்க பயண மோகத்தில் அவன் செய்ததை எண்ணி வருந்தினான். அதை மாற்றி தானே இறுதி சடங்குகளை செய்ய முடியுமா என்று கூட யோசித்தான். ஆனால் அதற்கான நேரம் கடந்து விட்டதே! ஆண்டவன் ரவிக்கு நன்றி கடனாக அந்த சலுகையை கொடுத்து விட்டானே!  மனிதனின் மறு பக்கம் அவன் மனசாட்சி என்பார்கள். அது வாசுவிடம் இப்பொழுது விஸ்வரூபம் எடுத்து அவனை அணு அணுவாக சித்தரவதை செய்தது
சிறிது நேரத்தில் வீட்டிற்குள் வந்த சுமதி, வாசுவின் நிலை கண்டு “அங்கே என்ன ஆயிற்று” என்று கேட்க   “அப்பா நம்மை எல்லாம் விட்டு போயிவிட்டார். அவருக்கு நான் இறுதி கடன்களை செய்யாமல், எங்கிருந்தோ வந்த அந்நியன் ரவிக்கு விட்டு கொடுத்தேனே”  என்று அழுததில் அவன் நிஜ உணர்வுகள் வெளியாயின. ஆனால் சுமதியோ எந்த வித சோக உணர்வுமில்லாமல் சகஜமாக “இன்றய பட்டிமன்றம்  முதியவர்கள் வீட்டிலிருப்பது உபயோகமா அல்லது உபத்திரமா என்பதை விவாதித்து அவர்கள் இருப்பது உபயோகமே என்று தீர்ப்பு கூறியது” என்றாள். வாசு திரும்ப அவளை பார்த்த பார்வையில் அவன் கண்கள் சிவந்தன. “அப்பாவிற்கு வயசாச்சு. போய் சேர்ந்துட்டாரு. அதுக்கு நாம் என்ன பண்ண முடியும்?” என்றாள் பதிலுக்கு சுமதி.
வாசலில் யாரோ காலிங் பெல் அடிக்க வாசு கதவை திறந்து, கொரியர் பையன் கொடுத்த கவரை பிரித்தான். அதில் பெரிய ஏமாற்றமே காத்திருந்தது. அதில் அவனுடைய அமெரிக்க பயணம் ரத்தாகி அடுத்த மாதத்திற்கு தள்ளி போடபட்ட செய்தி. அவனை விட சுமதிக்கு அதில் பெரிய ஏமாற்றம். “அமெரிக்க பயணதிற்காக  நீ உன் கடமையை விட்டு கொடுத்தாயே அதுவும் இப்பொழுது உன் கை விட்டு போய்விட்டது” என்று மனசாட்சி எதிரொலித்தது. .   
ரவி எல்லா சடங்குகளையும் முடித்து விட்டு முதியோர் இல்லம் திரும்ப,  ஒரு கார் அரசாங்க சைரனுடன்  நிற்பதை கண்டான். உள்ளே  மாவட்ட கலெக்டரும், நிர்வாகியும் பேசிக் கொண்டிருந்தனர். ரவி தன்னை அறிமுகம் செய்து கொண்டான். மத்திய அரசாங்கம்   இந்தியாவிலேயே இந்த ஆண்டின் தலை சிறந்த தலைமை ஆசிரியராக சதாசிவத்தை தேர்ந்து எடுத்திருக்கிறார்கள். என்றும், அதற்கான சான்றிதழ் இதில் இருக்கிறது என்றும். சன்மான தொகை ஐம்பது லட்ச ரூபாயை அவருடைய வங்கி சேமிப்பில் சேர்த்துவிட்டோம் என்றும் அந்த மாவட்ட அதிகாரி கூறினார்.  நிர்வாகி அவருடைய உயிலை பற்றி அதிகாரியிடம் சொல்ல, ரவி குறுக்கிட்டு அவர் சேமிப்பில் இப்பொழுது உள்ள அவ்வளவு பணமும் வானப்பிரஸ்த்திற்கே போய் சேரும் என்றான்.
மாலை தினசரி செய்தியில் இந்திய அரசாங்கம் சதாசிவத்தை இந்தியாவிலேயே தலை சிறந்த தலைமை ஆசிரியராக தேர்ந்து எடுத்ததும்,  அதற்கு சன்மானமாக ஐம்பது லட்ச ரூபாய் தொகையை கொடுத்ததும், மொத்த தொகையையும் ரவி விட்டு கொடுத்தபடி வானப்பிரஸ்த்திற்கே  போய் சேரும் என்ற செய்தியை படித்த வாசுவிற்கு,   மன சாட்சி மற்றும் ஒரு ஏமாற்றமா என்று ஏளனம் செய்தது. பெற்றவர்களை இயற்கையின் சதியால் நிரந்தரமாக இழக்கும் போது நாகரீக சூழ்நிலயின் நிர்பந்தமும்,  காலத்தின் கட்டாயமும் அந்த மன வலியை மறக்க வைத்தாலும், அந்த இழப்பு நம் மிஞ்சிய வாழ்நாளில் நிழலாக தொடரும். அதுதான் அந்த உறவின் பந்தம். இது எழுதப் படாத நியதி.





GEETHOPADESAM